“ஒத்துழைக்கலைன்னா கொன்னுடுவேன்...” - எஃப்ஐஆரில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் என்ன?
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் குற்றஞ்சாட்டப்பட்டோர் பட்டியலில் நான்காவது நபராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமார் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச் சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தவெக எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தகட்டமாக, கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய காவல்துறை தயாராகி வருகிறது. அவர்களிடம் நடத்தப்படவுள்ள காவல் விசாரணையின் மூலம், இந்த விவகாரத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பின்னணியில் வேறு நபர்கள் செயல்பட்டனரா என்பது குறித்து விரிவான தகவல்களை சேகரிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் குற்றஞ்சாட்டப்பட்டோர் பட்டியலில் நான்காவது நபராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமார் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் அவரை கைது செய்தால்தான், குதிரை பேர முயற்சியின் பின்னணியில் இருந்தவர்கள் யார், திட்டமிடல் எப்படி நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரும் என்று காவல்துறை கருதுகிறது.
இதையும் படிங்க: 7 உயிர்களை காவு வாங்கிய அமோனியா வாயு..! FIR- ல் திடுக்கிடும் தகவல்கள்...!
இந்த வழக்கில் முக்கியமாக ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச் சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக “ஒத்துழைக்காவிட்டால் உயிருடன் இருக்க முடியாது” என தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவை திருநாவுக்கரசு மிரட்டியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் கொலை மிரட்டல் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அசோக் குமாரை கைது செய்வதே காவல்துறையின் அடுத்தகட்ட முக்கிய இலக்காக உள்ளது. அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பகீர் கிளப்பிய எஃப்ஐ.ஆர்... செந்தில் பாலாஜிக்கு இடியை இறக்கிய போலீஸ்... அசோக்குமாருக்கு வலைவீச்சு...!