×
 

2 நாட்களாக காவல் நிலையத்தில் ஆஜராகாத செந்தில் பாலாஜி?! போலீசாரின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை என்ன?

தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்படி ஆஜராகி வந்த செந்தில் பாலாஜி, நேற்றும் இன்றும் ஆஜராகவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாதது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் விதித்த நிபந்தனையை அவர் பின்பற்றாதது குறித்து காவல்துறை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக எம்.எல்.ஏ. தொடர்பான குதிரை பேரம் குறித்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம், தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருந்தது. இதன்படி அவர் கடந்த சில நாட்களாக காவல் நிலையத்தில் ஆஜராகி வந்தார்.

ஆனால், நேற்று முதல் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இன்று காலையிலும் கையெழுத்திட அவர் வராததால், இந்த விவகாரம் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கிலும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், காவல் நிலையத்தில் ஆஜராகாதது புதிய சட்ட சிக்கலை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. செந்தில் பாலாஜி உடல்நலக் காரணங்களால் ஆஜராகவில்லை என்று தகவல்கள் வெளியாகினாலும், இதுகுறித்து அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.

நீதிமன்ற உத்தரவின்படி அவர் இன்று மாலையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டியுள்ளது. அந்த நிபந்தனையும் மீறப்பட்டால், நீதிமன்றத்தில் அவரது முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற நிபந்தனையை தொடர்ந்து பின்பற்றுகிறாரா, அல்லது அவரது தரப்பில் என்ன விளக்கம் அளிக்கப்படுகிறது என்பது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share