ராகுல் காந்தியுடன் முற்றும் மோதல்!! காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் சசிதரூர்! கட்சிக்குள் அதிருப்தி!
ராகுல் காந்தி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கேரள சட்டசபை தேர்தல் தொடர்பாக இன்று நடக்கும் காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் எம்பி சசி தரூர் புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள் பிளவு மீண்டும் தலைதூக்கியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி எம்பியும் மூத்த தலைவருமான சசி தரூர் இன்று (ஜனவரி 23, 2026) நடைபெறும் காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, கேரளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
சசி தரூர் அண்மை காலமாக பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசி வருவது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை "பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக கடினமான வேலையை செய்பவர்" என்று பாராட்டியது பாஜகவினரிடம் வரவேற்பை பெற்றது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 18ஆம் தேதி ராகுல் காந்தி கொச்சியில் நடத்திய மகாபஞ்சாயத் நிகழ்ச்சியில் சசி தரூருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எந்த கட்சியிலயும் இப்படி நடக்காது!! தமிழ்க காங்கிரஸ் அழிவின் பாதையில் போகிறது! ஜோதிமணி உருக்கம்!
நிகழ்ச்சியில் இருக்கை ஏற்பாடு, பேச்சு வரிசை உள்ளிட்டவற்றில் அவமானம் ஏற்பட்டதாக அவர் உணர்ந்துள்ளார். இதன் காரணமாகவே இன்றைய முக்கிய கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளா காங்கிரஸில் சசி தரூருக்கு எதிரான அதிருப்தி ஏற்கனவே உள்ளது. அவர் மாநில காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும், ராகுல் காந்தியின் அணுகுமுறைக்கு எதிராகவும் பேசி வருவது கட்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புறக்கணிப்பு கட்சியின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், கேரளாவில் காங்கிரஸ்-ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) வெற்றி பெறுவதற்கு உள் ஒற்றுமை அவசியம் என்று கட்சி வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
சசி தரூரின் இந்த முடிவு காங்கிரஸ் உயர்மட்டத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கட்சியில் தொடர்வாரா அல்லது புதிய அரசியல் பாதையை தேர்வு செய்வாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: 16 வயசுக்கு கம்மியா? சோஷியல் மீடியா யூஸ் பண்ண தடை!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!