×
 

டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஏற்பாடு செய்த ‘மாம்பழ விருந்து’ அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதில் பல வெளிநாட்டு தூதர்கள், எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நிலையில், ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஏற்பாடு செய்திருந்த ‘மாம்பழ விருந்து’ அதிக கவனம் பெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்த சந்திப்பு, உணவு விருந்தை விட அரசியல் விவாதங்களுக்கான மேடையாகவே மாறியதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் சில எம்.பி.க்கள் சக உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மதிய விருந்து அளிப்பது வழக்கமான நிகழ்வாகும். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோரும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

அந்த வரிசையில், சமீபத்தில் காங்கிரஸ் லோக்சபா உறுப்பினர் சசி தரூர் தனது இல்லத்தில் சிறப்பு விருந்தை ஏற்பாடு செய்தார். இதில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பல்வேறு நாடுகளின் தூதர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

இந்த நிகழ்ச்சி ‘மாம்பழ விருந்து’ என்றே அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்டது. காரணம், விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான மாம்பழங்களும், மாம்பழ சாறும் முக்கியமாக பரிமாறப்பட்டன. அதனுடன் சில இலகு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் வெளிநாட்டு தூதர்களின் பங்கேற்பு அதிக கவனம் பெற்றது. உலக அரசியல், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சசி தரூருடன் அவர்கள் விரிவாக விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சசி தரூர் அழைப்பு விடுத்திருந்த போதிலும், காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதேபோல், காங்கிரஸின் பல மூத்த தலைவர்களும் வராதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அண்மைக்காலமாக சசி தரூர் வெளியிட்டு வரும் கருத்துகள் கட்சிக்குள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருவதால், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, "சசி தரூர் காங்கிரஸில் தொடர்வாரா?" என்ற கேள்வியே இந்த சந்திப்பிலும் அதிகமாக பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: கட்சியில் இனி இடமில்லை... கதர் சட்டைகளை கலங்கடித்த ராகுல் காந்தி... கட் அண்ட் கறார் வார்னிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share