துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!
எந்தவொரு இந்தியரும் தங்கள் சொந்த மண்ணில் அந்நியராக உணரப்படாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் திரிபுராவைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் அஞ்சல் சக்மா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு துயரம் மட்டுமல்ல, தேசிய அவமானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சசி தரூர் தனது அறிக்கையில், “திரிபுராவைச் சேர்ந்த பெருமைமிக்க இந்தியரான அஞ்சல் சக்மா இனரீதியாகத் துன்புறுத்தப்பட்டு இழிவான வார்த்தைகளால் தரக்குறைவாகத் தாக்கப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டார். இது தனிப்பட்ட வன்முறைச் செயல் அல்ல. அறியாமை, பாரபட்சம், நமது சமூகத்தின் பன்முகத்தன்மையை மதிக்கத் தவறியதன் விளைவு இது” என்று கூறியுள்ளார்.
வட இந்தியாவில் வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனவெறி அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாகவும் வெட்கக்கேடானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “வளமான கலாசாரங்கள், மொழிகள், மரபுகளின் சங்கமமாகத் திகழும் வடகிழக்கு இந்திய அடையாளத்துக்கு முக்கியமானது. ஆனால் அப்பகுதி மக்கள் வழக்கமாக இனப் பாகுபாடு, புறக்கணிப்பு, துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இது முடிவுக்கு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!
அஞ்சல் சக்மாவுக்கு நீதி கோர வேண்டும் என்று கூறிய சசி தரூர், “நீதிமன்றங்களில் மட்டுமல்ல, தேசத்தின் மனசாட்சியிலும் நீதி கோர வேண்டும். அவரது மரணம் ஒரு புள்ளிவிவரமாகவோ கடந்து செல்லும் செய்தியாகவோ மாறக்கூடாது.
பள்ளிகளில் இந்திய சமூகங்களின் வரலாறு, கலாசாரங்களை கற்பிக்க வேண்டும். ஊடகங்கள் வடகிழக்கு மக்களை கண்ணியத்துடன் கையாள வேண்டும். சமூகம் தனது பாரபட்சங்களை மறக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். மதத் தலைவர்கள் பேச வேண்டும். மவுனம் உடந்தையாகும்” என்றார்.
ஹிந்து மதம் பன்முகத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கிய பாரம்பரியத்தையும் கொண்டது என்று நினைவூட்டிய சசி தரூர், “எந்தவொரு இந்தியரும் தங்கள் சொந்த மண்ணில் அந்நியராக உணரப்படாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பாக்., சீனா தலையீடு அதிகரிப்பு! இந்தியாவுக்கு சவாலாக மாறும் வங்கதேசம்! பார்லி., நிலைக்குழு வார்னிங்!