×
 

தேர்தல் வியூகத்தை திமுகவுக்கு உளவு சொல்றது யாரு? எடப்பாடி டென்சன்! கடுகடுக்கும் அமித்ஷா!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வியூகங்களை, தி.மு.க., தலைமைக்கு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் தெரிவிப்பதாக, பா.ஜ., மேலிடத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, 'யார் அவர்கள்' என, மத்திய உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.

டெல்லி: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜ) வியூகங்கள், திட்டங்கள் மற்றும் பிரதமர் மோடியின் தமிழக பயண விவரங்கள் கூட திமுக தலைமைக்கு ரகசியமாக தெரிவிக்கப்பட்டு வருவதாக பாஜக மேலிடத்துக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, மத்திய உளவுத்துறை இறங்கி விசாரணை நடத்தி வருகிறது. 'யார் இந்த உளவாளி?' என்ற கேள்வி இப்போது தேஜ கூட்டணியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிகுந்த உறுதியுடன் இருக்கிறார். அதற்கான பிரசார வியூகங்கள், தொகுதி பங்கீடு, புதிய கூட்டணி கட்சிகள் சேர்ப்பது உள்ளிட்ட ரகசிய திட்டங்கள் அ.தி.மு.க தலைமைக்கு தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இந்த முக்கிய தகவல்கள் சில அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திமுக தரப்புக்கு கசிந்து வருவதாக உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: என்னை கூப்பிடல..! பிரதமர் பங்கேற்கும் மாபெரும் கூட்டம்..! ஓபிஎஸ் விளக்கம்...!

உதாரணமாக, பிரதமர் மோடி இம்மாத இறுதியில் கன்னியாகுமரி செல்வதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் மதுரை வந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிடப்பட்டது. இந்த ரகசிய தகவல் அ.தி.மு.க தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது வெளியில் கசிந்ததால், "மதுரைக்கு பிரதமர் வந்தால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும்" என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனால் பிரதமரின் நிகழ்ச்சி சென்னைக்கு மாற்றப்பட்டது.

இதேபோல் பல முக்கிய தகவல்கள் திமுக தரப்புக்கு சென்றதை பாஜக உறுதி செய்துள்ளது. இதனால் தற்போது தொகுதி பங்கீடு, புதிய கூட்டணி கட்சிகள் சேர்ப்பது போன்ற முக்கிய ஆலோசனைகளுக்கு எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே டெல்லிக்கு அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் டெல்லி சென்ற பழனிசாமியிடம் அமித் ஷா தரப்பில் இந்த தகவல் கசிவு குறித்து தெளிவாக விளக்கப்பட்டதாகவும், இதனை விசாரித்து உண்மை நிலவரத்தை தெரிவிக்குமாறு அ.தி.மு.க தலைமையும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மத்திய உளவுத்துறை மூலம் தேஜ கூட்டணியில் இருந்து யார் திமுகவுக்கு உளவு சொல்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறது பாஜக மேலிடம். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டி? ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share