×
 

#BREAKING CM நேரடி கண்காணிப்பில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”... 1 எஸ்பி, 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் நியமனம்...!

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெண்களுக்கான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற ஒரு திட்டம் தொடங்கப்படும் என நேற்று விஜய் அறிவித்திருந்தார்

தமிழக சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். முதல்வராகப் பதவியேற்ற நிலையில், தொடர்ந்து செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்றதுமே மக்கள் முன்பு 3 திட்டங்களில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக தனது உத்தரவுகளை பிறப்பித்தார்.  முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது.  இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... 60 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதிய சி.எம். விஜய்... எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு...!

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெண்களுக்கான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற ஒரு திட்டம் தொடங்கப்படும் என நேற்று விஜய் அறிவித்திருந்தார். தற்போது முதல்வர் விஜயின் நேரடி கண்காணிப்பில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஐஜி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டிருப்பதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதிய பதவியாக அதாவது சிங்கப்பண் அதிரடிப்படை என்கின்ற விங்கிற்கு புதிய ஐஜி ஒருவர் நியமிக்கப்படுவார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சருடைய நேரடி கண்காணிப்பில் இயங்கும் எனவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கக்கூடிய அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

முதற்கட்டமாக காவல்துறை தலைமையகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஐஜி தலைமையில் அமைக்கப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் மூன்று காவல் அதிகாரிகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு பிரிவில் 1 எஸ்.பி, 2 டி.எஸ். பி மற்றும் 4 ஆய்வாளர்கள் பணியாற்றவுள்ளனர். பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சட்ட விரோத செயல்களை தடுத்தல், புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் சிங்கப்பெண் சிறப்பு அரடிப்படையில் செயல்படும் எனவும் தமிழ்நாடு அரசு தனது அரசாணை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகள் மேலும் தனியாக செல்லும் பொழுதும், பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவது போன்ற பணிகளில் தனியாகவே இந்த சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து சிறப்பு அதிரடிப்படை கண்காணிக்கும் என விளக்கம்.  பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், IT நிறுவனங்கள் உள்ள இடங்கள் கண்காணிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share