×
 

35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!

ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு வாழ்க்கை முன்வைத்த கடினமான சூழல்களை சோனியா காந்தி மிகுந்த துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டதை நேரில் பார்த்ததாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் ‘Belonging: A Journey of Love’ என்ற பெயரில் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, தாய் சோனியா காந்தி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு கவனம் பெற்றுள்ளது.

சோனியா காந்தியின் குழந்தைப் பருவம் முதல் அவரது அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை வரையிலான பல்வேறு அனுபவங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சிறிய நகரத்தில் கழித்த குழந்தைப் பருவம், போருக்குப் பிந்தைய காலத்தின் நினைவுகள், ராஜீவ் காந்தியுடனான திருமணம், குடும்ப வாழ்க்கை மற்றும் கணவரின் இழப்புக்குப் பிறகு எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளை சோனியா காந்தி இதில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடல் அவமதிப்பு?! சோனியா காந்தி மீது போலீசில் புகார்! 3 ஆண்டு சிறை வரை தண்டனை?

இதற்கிடையே, தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. அதில், சோனியா காந்தியையும் ராஜீவ் காந்தியையும் ஒன்றாக கடைசியாக பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு வாழ்க்கை முன்வைத்த கடினமான சூழல்களை சோனியா காந்தி மிகுந்த துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டதை நேரில் பார்த்ததாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். தாயின் வாழ்க்கையில் கடந்து வந்த சவால்களை தானும், சகோதரி பிரியங்கா காந்தியும் மட்டுமே முழுமையாக அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதை விரும்பாத சோனியா காந்தி, தனது வாழ்க்கைக் கதையை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகவும் ராகுல் கூறியுள்ளார்.

சோனியா காந்தியின் வாழ்க்கைக் கதையை அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வாசிக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால், தனது மனைவி சோனியா காந்தியை பார்த்து பெருமையுடன் புன்னகைத்திருப்பார் என்ற உணர்வையும் ராகுல் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் வெளியான இந்தப் பதிவு, அவரது குடும்ப வாழ்க்கையின் தனிப்பட்ட பக்கங்களை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. அதே நேரத்தில், சோனியா காந்தியின் வாழ்க்கையை அவருடைய பார்வையில் அறிமுகப்படுத்தும் ‘Belonging: A Journey of Love’ புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share