சத்தியபாமா விவகாரம் விஸ்வரூபம்!! மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்!! திருச்சியில் பரபரப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி நிர்மலா புகார் அளித்துள்ளார். இதேபோல் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் தவெக மகளிரணி நிர்வாகிகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி: தாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தவெக மகளிரணி மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” உள்ளிட்ட வார்த்தைகளால் விமர்சித்தார். இந்தப் பேச்சு அவரது அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பதைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் உருவக்கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தவெக தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் நடவடிக்கையை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி நிர்மலா புகார் அளித்துள்ளார். இதேபோல் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் தவெக மகளிரணி நிர்வாகிகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாகவும், இதனை தட்டிக்கேட்க வேண்டிய கட்சித் தலைவரான ஸ்டாலினே சத்தியபாமாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாகவும் புகார்தாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பெண்களை அவமதிக்கும் வகையிலான பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், சம்பந்தப்பட்டவரே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் புகார் மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் மட்டுமின்றி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம், தில்லைநகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புகார்கள் அளிக்கப்பட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 காவல் நிலையங்களில் ஸ்டாலினுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. புகார்களின் அடிப்படையில் காவல்துறை மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கையே இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சத்தியபாமா குறித்த ஸ்டாலினின் பிரசாரப் பேச்சு தற்போது அரசியல் விமர்சனத்தைத் தாண்டி காவல் நிலைய புகார் வரை சென்றுள்ளதால், தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!