×
 

உட்கட்சி பூசலுக்கு உடனடி தீர்வு!! மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் கறார் உத்தரவு!!

உட்கட்சி பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண மண்டல பொறுப்பாளர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார்.

தி.மு.க.,வில், தி.மு.க.வில் 76 மாவட்டச் செயலர்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், எட்டு மண்டலங்களுக்கு மண்டல பொறுப்பாளர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் தொகுதிவாரியாக கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சேர்ந்து, தேர்தல் பணிகளை கவனிக்கும் நிர்வாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

இந்தப் பெரிய அமைப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தும் என்றாலும், உட்கட்சி மோதல்கள் மற்றும் குறைகள் தொடர்ந்து அறிவாலயத்தை வந்தடைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

'உடன்பிறப்பே வா' என்ற திட்டத்தின் கீழ், முதல்வர் ஸ்டாலின் தொகுதிவாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து, உற்சாகப்படுத்தி வருகிறார். அப்போது, தொகுதி நிலவரம், உட்கட்சி பூசல்கள், மாவட்டச் செயலருக்கும் பொறுப்பு அமைச்சருக்கும் இடையேயான மோதல்கள் குறித்த புகார்கள் அவரது கவனத்திற்கு வருகின்றன. 

இதையும் படிங்க: திமுக போல வெற்றி பெற அறிவு வேணும்! உழைக்கணும்! பகல் கனவு காணக்கூடாது! விஜயை சீண்டும் ஸ்டாலின்!!

இதுபோன்ற பிரச்னைகள் தலைமைக்கு வரும்போது, இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து, எச்சரித்து அனுப்பி வைக்கிறார். சில மண்டலங்களில் மாவட்டச் செயலர்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ள தகவல்கள் அறிவாலயத்தை வந்தடைந்துள்ளன.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவுகளை வழங்கியுள்ளார். ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான கோஷ்டி பூசல் பிரச்னைகளை மாவட்டச் செயலரும் பொறுப்பாளரும் தீர்த்து வைக்க வேண்டும். அவர்களால் முடியாத பட்சத்தில், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மண்டல பொறுப்பாளர்களால் தீர்வு காண முடியாத பிரச்னைகளை மட்டுமே மாநில தலைமைக்கு எடுத்து வர வேண்டும். 

எனவே, எட்டு மண்டலங்களின் பொறுப்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறைகள், புகார் தொடர்பான பிரச்னைகளை தொடர்ந்து கண்காணித்து, தீர்வு காண வேண்டும். அந்த விபரத்தை அறிக்கையாக அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு, உட்கட்சி ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, தேர்தல் பணிகளை திறம்பட நடத்துவதற்கு உதவும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க.வின் இந்த அமைப்பு ரீதியான அணுகுமுறை, 2026 தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக அமையும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உட்கட்சி மோதல்களை உடனடியாகத் தீர்ப்பது, கட்சியின் உள் ஒழுங்கை பலப்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: ஒருத்தர் கூட மிஸ் ஆகக்கூடாது! SIR விவகாரம்! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share