×
 

பிரச்சனையைத் திசை திருப்பும் பாரதிதாசன்... மலேசிய மாணவன் விவகாரத்தில் நடந்தது இதுவா? - தமிழக அரசு பரபர விளக்கம்..!...!

துறை ரீதியிலான நடவடிக்கைகளை விமர்சித்திருந்த மாணவர், அந்தக் கட்டணத்தை திமுக கூட கட்டத் தயாராக இருப்பதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

மலேசியாவில் படித்து வரும் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சமூக நீதித்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

மலேசியா நாட்டில் பிஎச்.டி. எனப்படும் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு, அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, துறை ரீதியிலான நடவடிக்கைகளை விமர்சித்திருந்த மாணவர், அந்தக் கட்டணத்தை திமுக கூட கட்டத் தயாராக இருப்பதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: செப்.19-ல் திமுக முப்பெரும் விழா! அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு!

இந்த நிலையில், இது தொடர்பாக சமூக நீதித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாணவர் முதலாம் ஆண்டு படிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்காக ரூ.8,19,620 பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்புடையதாக இல்லாத விவரங்கள் குறித்தும், மாணவரால் ஆராய்ச்சிப் பொருட்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், அதாவது ‘Proof of Payment’ தொடர்பாகவும், கடந்த 08.08.2026 அன்று மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை என்றும் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர் மலேசியாவின் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் மலேசியா பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு, இரண்டாம் ஆண்டு செலவினங்களுக்காக ஆராய்ச்சி செய்வதற்கு ரூ.19.58 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலும், மலேசிய ரிங்கிட் 8,300-ம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மாணவரின் ஆராய்ச்சிப் பொருட்கள் மற்றும் அதற்கான செலவினங்களுக்காக இந்தத் தொகை தேவைப்படுவதாக பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு, இன்று 17.09.2026 மதியம் 1 மணியளவில் துறை ரீதியாக மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திலிருந்து பதில் பெறப்படுவதற்கு முன்பாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் சமூக நீதித்துறை தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், 2022-27ஆம் ஆண்டில் சமூக நீதித்துறையில் இதுவரை கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காக, 365 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஒப்பளிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்திற்காக சமூக நீதித்துறையால் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதித்துறையால் 2026-27ஆம் நிதியாண்டில் அரசு மற்றும் சுயநிதிக் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,750-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 95,000 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதற்காக அரசுக்கு ரூ.65 கோடி கூடுதல் நிதிச்செலவு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகைத் திட்டங்களைப் பொறுத்தவரை, சமூக நீதித்துறை இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், மாணவர் வெளியிட்டுள்ள காணொளியில் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இந்தத் திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அந்தக் காணொளி வெளியிடப்பட்டுள்ளதாகவும் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share