மகாராஷ்டிரா துணை முதல்வராகிறார் அஜித்பவார் மனைவி?! இன்று பதவியேற்பு!
மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீரென ஏற்பட்ட சோகமான நிகழ்வு அனைவரையும் உலுக்கியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவரும், மாநில துணை முதல்வருமான அஜித் பவார், கடந்த புதன்கிழமை (ஜனவரி 28, 2026) பாராமதி விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவர் பாராமதி தொகுதிக்கு செல்லும் வழியில் சென்ற லியர்ஜெட் 45 விமானம் தரையிறங்க முயன்றபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அஜித் பவார் மகாராஷ்டிரா அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். நிதித்துறை, விளையாட்டுத்துறை மற்றும் மாநில சுங்கத்துறை போன்றவற்றை அவர் கவனித்து வந்தார். அவரது திடீர் மறைவால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கட்சியின் அடுத்த தலைவர் யார்? தாய்க்கட்சியுடன் இணைவது பற்றி என பல கேள்விகள் எழுந்தன.
இதையும் படிங்க: அஜித்பவாரின் மனைவிக்கு அமைச்சரவையில் இடம்? அமைச்சராகிறார் சுனேத்ரா பவார்? மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
இதனிடையே, என்சிபி மூத்த தலைவர்கள் பிரபுல் படேல் உள்ளிட்டோர் முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினர். அஜித் பவார் வகித்த பொறுப்புகளை தங்கள் கட்சிக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அஜித் பவாரின் மனைவியான சுநேத்ரா பவார் மாநில அரசியலில் முக்கிய இடத்தை பெற உள்ளார். ராஜ்யசபா எம்பியாக உள்ள சுநேத்ரா பவார், இன்று (ஜனவரி 31, 2026) மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். என்சிபி சட்டமன்ற குழு கூட்டத்தில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், மகாராஷ்டிரா வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதிவாக உள்ளார். இது பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும்.
சுநேத்ரா பவார் ஏற்கனவே சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர். அஜித் பவாரின் மறைவால் காலியான பாராமதி சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இதனால், அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற தேர்தலில் களமிறங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் பவாரின் பாரம்பரியத்தை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய அவர் முன்வருவது கட்சியினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு மகாராஷ்டிரா அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அஜித் பவாரின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை சுநேத்ரா பவார் நிரப்புவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!