×
 

நீலகிரியை உலுக்கும் 'சூப்பர் எல் நினோ'..!! தேயிலை சாகுபடியில் கடும் பாதிப்பு!

நீலகிரியில் சராசரி வெப்பநிலை 0.50 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.

நீலகிரி மலைப்பிரதேசத்தின் தேயிலைத் தோட்டங்கள், உலகளாவிய காலநிலை மாற்றமும் சூப்பர் எல் நினோ நிலைமைகளும் இணைந்து உருவாக்கும் அசாதாரண சவாலை எதிர்கொள்கின்றன. யுபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (UPASI Tea Research Foundation) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேயிலைச் செடிகள் இளம் தளிர்களைத் தொடர்ந்து பறித்து அறுவடை செய்யப்படுவதால், வெப்பநிலை, மண் ஈரப்பதம், காற்றின் ஈரப்பதம் போன்ற சிறிய மாற்றங்கள்கூட தளிர் வளர்ச்சி, இடைவெளி நீளம், அறுவடை நேரம், மகசூல், செடியின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் தேயிலைத் தரத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. 

நீலகிரியில் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 0.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மேலும், பனிப்பொழிவு மற்றும் ஆலங்கட்டி மழையின் தாக்கம் விரிவடைந்து, தேயிலைச் செடிகளின் வளர்ச்சியும் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த ஆண்டு மழை அளவு பெரிதாகக் குறையாவிட்டாலும், வறண்ட நாட்கள் அதிகரிப்பதும் குறுகிய காலத்தில் கடும் மழை பெய்வதும் மண் ஈரப்பதத்தில் பற்றாக்குறையை உருவாக்குகின்றன.

இதையும் படிங்க: நீலகிரியை சூழ்ந்த 'கருப்புப்படை'..!! மர்ம பூச்சியால் பாதிப்பா..!! பதறும் மக்கள்..!!

இந்தத் தாக்கத்தை சமாளிக்க, கிளிரிசிடியா (Gliricidia) போன்ற நிழல் தரும் மரங்களை வளர்த்து நுண்ணிய காலநிலையைக் கட்டுப்படுத்த வேண்டும். மண் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, வறட்சியைத் தாங்கும் சாகுபடி முறைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பயிர் வகைகளைப் பல்வகைப்படுத்துதல், பூச்சி-நோய் கண்காணிப்பு மற்றும் இளம் செடிகளைப் பாதுகாத்தல் ஆகியவையும் முக்கியம் என ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

நீலகிரி தேயிலைத் தொழில் உள்ளூர் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரம். எனவே, விவசாயிகளும் தோட்ட மேலாளர்களும் இந்தப் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்தி, செடிகளின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 2 நாட்களுக்கு 60 கி.மீ வேகக் காற்றுடன் கனமழை எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share