×
 

ஆட்சி அமைக்க அனுமதியுங்கள்!! விஜய்க்கு பெருகும் ஆதரவு!! கவர்னருக்கு வலுக்கும் கண்டனம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சியை அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்காதது கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.

தமிழக அரசியலில் பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காதது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தெளிவான பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியமைப்பை சுற்றி தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று இரண்டாவது முறையாக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

இதற்கிடையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதவியேற்புக்கு முன்பே தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். தவெக தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க தேவையான அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் சீக்கிரமே ஆட்சி அமைப்பார்! தவெக ஆட்சி அமையும்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி உறுதி!

அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் இதே கருத்தை முன்வைத்திருந்தார். “மக்கள் தனிப்பெரும் கட்சியாக தவெகவை தேர்ந்தெடுத்துள்ளனர். விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஆளுநர் தாமதிப்பது குழப்பத்தை உருவாக்குகிறது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

பல தரப்பிலிருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ளதால், ஆளுநர் அடுத்ததாக எவ்வாறு முடிவு எடுக்கப் போகிறார் என்பது தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: பெரும்பான்மையை ராஜ் பவனில் தான் நிரூபிக்கணுமா..? விஜய்க்கு வழி விடுங்க..! கமல்ஹாசன் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share