வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சரியானதே! எஸ்.ஐ.ஆர் பணி திருப்தி! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
இந்திய தேர்தல் கமிஷனின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிரான வழக்கில் இன்று (மே 27) சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) செய்யும் பணி சரியானதே என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சுப்ரீம்கோர்ட் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. தேர்தலில் முறைகேடுகளை தடுக்கவும், வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என சுப்ரீம்கோர்ட் உறுதிபடுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டு இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள் போன்ற தகுதியற்ற நபர்களை கண்டறிந்து நீக்குவதற்காக, இந்திய தேர்தல் கமிஷன் நாடு முழுவதும் “சிறப்பு தீவிர திருத்தம்” என்ற பெயரில் எஸ்.ஐ.ஆர். பணியை தொடங்கியது. இதற்காக அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்தனர்.
இந்த நடவடிக்கை சட்ட விரோதம் என்றும், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்களின் குடியுரிமையை சந்தேகப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சுப்ரீம்கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!
இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பக்சி அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் அடித்தளம் துல்லியமான வாக்காளர் பட்டியல் தான். எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் எந்த தவறும் இல்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த 40 ஆண்டுகளாக முழுமையான தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படாததால், இரட்டை பதிவு மற்றும் தவறான பெயர்கள் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் வாக்காளர் பட்டியலின் நேர்மையை பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை எனவும் கூறப்பட்டது.
1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1960 வாக்காளர் பதிவு விதிகளுக்கு எதிராக இந்த நடைமுறை இல்லை எனவும், வாக்காளர்களிடம் ஆதார ஆவணங்கள் கேட்பது தவறல்ல என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்தது.
அதேநேரத்தில், தேர்தல் ஆணையம் ஒருவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, அவர் இந்திய குடிமகன் அல்ல என்பதை நிரூபிப்பதல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதையும் படிங்க: அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!