ஹப்பாடா! ஒரு வழியா முடிஞ்சுது!! நிம்மதி பெருமூச்சு விடும் எடப்பாடி! தப்பியது பதவி!
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எதிராக வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தொடர்வதற்கு சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கட்சியின் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே உறுதியானது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியமூர்த்தி, 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அதன்படி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சிவில் நீதிமன்றம் கடந்த ஜூலையில் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றம் விசாரித்து, சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கையே நிராகரித்து கடந்த செப்டம்பர் 4-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சூரியமூர்த்தி தரப்பில் வழக்கறிஞர் அனில் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு வாருங்கள்!! ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் அழைப்பு!
இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆலோக் ஆராதே அமர்வு இன்று விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, சூரியமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து தொடரப்பட்ட சட்டப் போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தீர்ப்பு அதிமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியை ஒருங்கிணைத்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை சட்டரீதியாக முடிவடைந்துள்ள நிலையில், கட்சி தற்போது தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக செய்யும் தகிடுதத்தம்!! வாக்காளர் பட்டியல் முறைகேடு! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்!