×
 

மு.க.ஸ்டாலினை தொடரும் கொளத்தூர் வழக்கு!! 13 ஆண்டுக்கு பின் ட்விஸ்ட்! சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்!

சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2011ல் நடந்த தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், முக்கிய திருப்பமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இவ்வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி களமிறங்கினார். தேர்தல் முடிவில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக சைதை துரைசாமி குற்றம் சாட்டினார். மேலும், அரசு இயந்திரங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையும் படிங்க: தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?! இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!

உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் முறைகேடுகள் நடைபெறவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஸ்னோய் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரு நீதிபதிகளும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

இரு பக்கங்கள் கொண்ட உத்தரவில், “எங்கள் இருவரும் அல்லாத புதிய அமர்வு முன்பு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் பட்டியலிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலகுவதற்கான காரணங்களை நீதிபதிகள் வெளிப்படுத்தவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி வரும் ஜூன் 28-ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துக்கொண்டிருப்பதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அமர்வு முன்பு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!! திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share