இந்தியா யாருக்குச் சொந்தம்? சட்டவிரோதக் குடியேறிகள் உரிமைக் கோர முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி!
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகள், நாட்டின் குடிமக்களுக்குச் சமமான உரிமைகள் கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கியுள்ள சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் ஊடுருவியவர்கள் நாட்டின் குடிமக்களுக்குச் சமமான சட்டப்பூர்வ உரிமைகளைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரோஹிங்கியா அகதிகள் சிலரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரிய 'ஆட்கொணர்வு மனு' மீதான விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, "ஊடுருவியவர்களுக்கும், சட்டவிரோதக் குடியேறிகளுக்கும் எந்தச் சட்டப்பூர்வ உரிமையும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், சட்டவிரோதக் குடியேறிகள் இந்தியாவில் நுழைந்த பிறகு, உணவு, தங்குமிடம் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு உதவிக்கான உரிமைகளைக் கோருவதாகச் சுட்டிக்காட்டினர். இது குறித்துக் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், "நமது நாட்டில் ஏராளமான ஏழை மக்கள் இருக்கின்றனர். நாட்டின் வளங்களின் மீது அவர்களுக்குத்தான் உரிமை உண்டு, சட்டவிரோதக் குடியேறிகளுக்கு இல்லை," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இருப்பினும், சட்டவிரோதக் குடியேறிகள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாத வரையில், அவர்களைக் காவலில் வைத்து மூன்றாம் தரச் சிகிச்சைக்கு உட்படுத்த முடியாது என்ற மனிதாபிமான அணுகுமுறையை நீதிமன்றம் கடைப்பிடிப்பதாக நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் மனு ரோஹிங்கியாக்களுக்கு அகதி அந்தஸ்தைக் கோரவில்லை என்றும், ஆனால் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் custodial disappearance-ஐ கண்டறியவே கோரப்படுகிறது என்றும் வாதாடினார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள், தங்களைக் கையாளுவதற்குச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கோர முடியுமா என்று கடுமையான கேள்வியை எழுப்பினர்.
இதையும் படிங்க: பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!
முன்னதாக, ஏப்ரல் 2021-இல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு முக்கியத் தீர்ப்பில், இந்தியாவில் வசிக்கும் உரிமை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், எனவே நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிரான உரிமை அயல்நாட்டவருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19-இன் கீழ் இல்லை என்றும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ரோஹிங்கியாக்கள் அகதிகளா அல்லது சட்டவிரோதக் குடியேறிகளா என்ற சட்டப்பூர்வமான கேள்வி இன்னும் நிலுவையில் உள்ளது என்றும், அகதி என்பது சட்டத்தால் வரையறுக்கப்பட்ட சொல் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: ராஜ் பவனைத்தொடர்ந்து பெயர் மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!