அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு!! சென்னை ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை!
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1996-2001 ஆம் ஆண்டுகளில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2002ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை 2007ஆம் ஆண்டு வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவை ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ED ரேடாரில் சிக்கும் அடுத்த அமைச்சர்?! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
துரைமுருகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், எதிர் தரப்பினருக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு அமைச்சர் துரைமுருகனுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு, இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆறு மாத கால அவகாசமும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த வழக்கு நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒன்று. உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு, வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இன்னும் சில காலம் தள்ளிப் போட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!