மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவின் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் பாஜகவின் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார்.
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாஜகவின் சுவேந்து அதிகாரி இன்று மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார்.
இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநில கவர்னர் ஆர்.என். ரவி சுவேந்து அதிகாரியை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரியை வாழ்த்தினர்.
தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றது. தொடர்ந்து 15 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்ட திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம் மம்தா பானர்ஜியின் நீண்டகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!
மேற்கு வங்க அரசியலில் முக்கிய முகமாக விளங்கும் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். அவர் முதல்வராக பதவியேற்றுள்ளது பாஜகவுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த வெற்றி வடகிழக்கு மாநிலங்களுக்கு அப்பால் கிழக்கு இந்தியாவிலும் பாஜகவின் வலிமை அதிகரித்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
பதவியேற்பு விழாவில் பேசிய தலைவர்கள், “மக்களின் ஆதரவுடன் புதிய அரசு மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்” என நம்பிக்கை தெரிவித்தனர். மம்தா பானர்ஜியின் ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், மக்கள் மாற்றத்தை விரும்பியதாக பாஜக தரப்பு தெரிவித்தது.
இந்த ஆட்சி மாற்றம் தேசிய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். புதிய முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கம் புதிய பாதையில் செல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி!! மே 9ல் பதவிஏற்பு! மோடி சூசகமாக சொன்ன தகவல்!