30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களும், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது என அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் எந்த மனுவும் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது என்று தமிழக அரசு அனைத்து துறைச் செயலர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் குறைகளை விரைவாகத் தீர்ப்பது, அரசின் செயல்பாடுகளை மேலும் வெளிப்படையாக மாற்றுவது மற்றும் துறைகளின் செயல்திறனை உயர்த்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார், சமீபத்தில் அனைத்து துறைச் செயலர்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!
அந்தக் கூட்டத்தில், மக்கள் மனுக்கள் தொடர்பாக தாமதம் ஏற்படக் கூடாது என்றும், ஒவ்வொரு மனுவுக்கும் உரிய காலக்கெடுவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனுக்களின் நிலை குறித்து ஒவ்வொரு வாரமும் துறைத் தலைவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், 30 நாட்களுக்கு மேல் எந்த மனுவும் நிலுவையில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மாவட்டங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கைகளை உடனுக்குடன் அரசிடம் சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசாணைகளும் தாமதமின்றி சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளங்களில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும், ஆளுநர் உரையில் இடம்பெற்ற அறிவிப்புகளுக்கான அரசாணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 'உங்கள் அரசை தெரிந்து கொள்ளுங்கள்' திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்பட தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி நிலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய மானியங்கள் மற்றும் நிலுவை நிதிகளை விரைந்து பெறும் பணிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், துறை சார்ந்த முக்கிய முடிவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு செயலர்கள் தொடர்ந்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் வலியுறுத்தியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை