மசோதாக்களை நிறுத்தி வச்சேனா? உண்மை என்னானு தெரியுமா? கவர்னர் - முதல்வர் சந்திப்பில் நடந்தவை என்ன?
எல்லா மசோதாக்களையும் நிறுத்தி வைத்திருக்கிறேன் என, குற்றம் சாட்டுவது விஷமத்தனமானது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழகத்தில் மசோதாக்களை தாமதப்படுத்துவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“நான் பதவியேற்ற முதல் மூன்றே மாதங்களில் என்னிடம் வந்த மசோதாக்களில் 80 சதவீதத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன். ஒரே வாரத்தில் 60 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். 13 சதவீத மசோதாக்களை மட்டுமே ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இது அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி செய்யப்பட்ட நடவடிக்கைதான். ஆனால் ‘எல்லா மசோதாக்களையும் நிறுத்தி வைத்திருக்கிறார்’ என்று குற்றம் சாட்டுவது முற்றிலும் விஷமத்தனமானது” என்று கவர்னர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக சட்ட மசோதாக்கள் தொடர்பாக பேசிய அவர், “கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணை அதிகாரம் உள்ளது. தமிழக பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன்.
இதையும் படிங்க: இனி டிலே ஆகாது!! கவர்னர் ஆர்.என்.ரவி மும்முரம்! 3 மாதங்களில் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல்!!
அதை விரும்பாத அரசு, கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவைக் கொண்டு வந்தது. இதுபோன்ற மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் இல்லாமல் முடிவெடுக்க முடியாது என்பதால் அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பினேன்” என்றார்.
முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஆகியோர் தன்னை சந்தித்து பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஒப்புதல் கேட்டதாகவும் கவர்னர் கூறினார். “நான் ‘இந்த மசோதாக்கள் நீதிமன்றத்தில் நிற்காது’ என்று தெளிவாகச் சொன்னேன்.
அதை ஒப்புக் கொண்ட ஒரு அமைச்சர் தலைமைச் செயலரிடம் ‘அப்படியா?’ என்று வியப்புடன் கேட்டார். தலைமைச் செயலரும் ‘ஆமாம்’ என்றார். இருந்தும் முதல்வர் மீண்டும் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்” என்று ஆர்.என்.ரவி விவரித்தார்.
தமிழகத்தில் இன்னும் சாதி வன்மம் நீடிப்பதாகவும் கவர்னர் வேதனை தெரிவித்தார். “பட்டியலின மக்கள் காலணி அணிந்து சில தெருக்களில் செல்ல முடியவில்லை என செய்திகள் வருகின்றன. ஒரு பள்ளியில் தலித் மாணவர்களைத் தனியே வைப்பதற்காக நான்கடி சுவர் கட்டியிருந்தார்கள். நான் அந்தப் பள்ளிக்கு வரப்போவதாகத் தெரிந்ததும் அவசர அவசரமாக அந்தச் சுவர் இடிக்கப்பட்டது” என்று கூறினார்.
மேலும், “தமிழக மக்கள் சனாதன சிந்தனைகளில் திளைத்தவர்கள். நமது நாட்டின் அடித்தளமே சனாதனம்தான்” என்று கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் தெரிவித்தார். கவர்னருக்கும் திமுக அரசுக்கும் இடையிலான மோதல் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தப் பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நவ.27-ல் தவெகவில் இணையும் செங்கோட்டையன்! டிச.15ம் தேதி - கெடு விதிக்கும் ஓபிஎஸ் !! விழிபிதுங்கும் இபிஎஸ்!