தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்அப் செயலி வாயிலாக, 1.25 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை மேலும் எளிதாகக் கொண்டு செல்லும் நோக்கில், மாலை நேர மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அருண்ராஜ், உயர் சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு மற்றும் சிறப்பு வார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்து நேரடியாக கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பல முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.
அமைச்சர் கூறுகையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 'நலம் AI' வாட்ஸ்அப் சேவை மூலம் இதுவரை சுமார் 1.25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!
மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழி புறநோயாளர் முன்பதிவு முறையை பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனையை எளிதாக பெற்றுள்ளதாகவும் கூறினார். இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளதாக அவர் விளக்கினார்.
மருத்துவக் கல்வி தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டை தற்போதைய அளவிலிருந்து 10 சதவீதமாக உயர்த்தும் வாய்ப்பு இருந்தால், அதுகுறித்து முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் மாலை நேரங்களில் செயல்படும் மினி கிளினிக்குகளை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான விரிவான அறிவிப்பு மாநில பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. பின்னர், திட்டமிடல் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அவை தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டன. தற்போது அந்த சேவையை புதிய வடிவில் மீண்டும் கொண்டு வர அரசு திட்டமிட்டிருப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!