×
 

மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

மருந்தகங்களில் ஆய்வு என்ற பெயரில், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மாதந்தோறும் வசூல் வேட்டை நடத்துவதை தடுக்கவும், நிர்வாகப் புகார்களுக்கு பிரத்யேக வசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், மருந்தக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: தமிழக மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் “ஆய்வு” என்ற பெயரில் மாதந்தோறும் லஞ்சம் வசூலிப்பதாக பெரும் புகார் எழுந்துள்ளது. இதைத் தடுக்கவும், நிர்வாகப் புகார்களுக்கு தனி புகார் வழிமுறை ஏற்படுத்தவும் மருந்தக உரிமையாளர்கள் முதல்வர் விஜய் மற்றும் புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. பார்மசி படிப்பு முடித்து தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளர் பெயரில்தான் உரிமம் வழங்கப்பட வேண்டும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வீரிய மருந்துகளை விற்கக் கூடாது, கொள்முதல்-விற்பனை பதிவுகளை சரியாக பேண வேண்டும் என பல விதிமுறைகள் உள்ளன. இவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பல ஆய்வாளர்கள் விதிமீறல்களை பொருட்படுத்தாமல், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வசூலிப்பதாக மருந்தக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இனி தேவையில்லை!! தனிப்பெரும்பான்மை நோக்கி நகர்கிறது விஜயின் தவெக!

கோவையைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர் கூறுகையில், “ஒரு மருந்தகத்துக்கு குறைந்தபட்சம் ₹5,000 என வசூலித்தாலும் மாதம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலாகிறது. ஆட்சி மாறினாலும் இந்த வசூல் தொடர்கிறது. முந்தைய அரசுகளில் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை இதில் பங்கு பெற்றதாக புகார் உள்ளது. புதிய அரசு நேர்மையான நிர்வாகம் கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மருந்தக உரிமையாளர்கள் மேலும் கூறியதாவது: ஆவணங்கள் சரியாக வைத்திருந்தாலும் கப்பம் கட்டினால்தான் நிம்மதியாக தொழில் செய்ய முடிகிறது. மருந்தக உரிமையாளர்கள் அச்சமின்றி புகார் அளிக்க, அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் தனி புகார் எண் மற்றும் இ-மெயில் வசதி ஏற்படுத்த வேண்டும். இதனால் மருந்தாளர்கள் மற்றும் மக்களின் நலன் பாதுகாக்கப்படும்.

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மருந்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும், ஊழல் ஒழிப்பும் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது. மருந்தகத் துறையில் நிலவும் இந்த முறைகேடுகளுக்கு தீர்வு காண முதல்வர் விஜய் உடனடி நடவடிக்கை எடுப்பார் என மருந்தக உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்த தீவிர ஆலோசனை! அடுத்த சிக்சருக்கு ரெடியாகும் முதல்வர் விஜய்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share