திருத்தணி தாக்குதல்!! எங்க கடமையில தலையிடாதீங்க!! போலீஸ் செயலுக்கு அண்ணாமலை காட்டம்!
திருத்தணியில் நடந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் சைபர் குற்றப் பிரிவு போலீசில் வழக்கு பதிவாகி விசாரணை நடக்கிறது.
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சென்னை-திருத்தணி மின்சார ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவரை நான்கு சிறுவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து, திருவள்ளூர் சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் வீடியோவை சிலர் தங்கள் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) தள கணக்குகளில் பதிவேற்றி ஆன்லைனில் பரப்பியுள்ளனர். இது பொது அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் ஒழுங்குக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!
ரயில் பயணத்தின்போது கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்களை பரப்புவது இளைய தலைமுறையினரை வன்முறையில் ஈடுபட தூண்டும் அபாயம் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் எழலாம் என்று அஞ்சப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, இத்தகைய வீடியோக்களை பரப்பும் இணையதள முகவரிகள் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கருதி, அவற்றை முடக்க வேண்டும் என்று தமிழக சைபர் குற்றப் பிரிவு தலைமையக டிஜிபி சந்தீப் மிட்டல் 'எக்ஸ்' நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நடவடிக்கை குற்றங்களை தடுக்கவும், சமூகத்தில் வன்முறை பரவாமல் தடுக்கவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். அரசின் அக்கறையின்மை மற்றும் நிர்வாக சீர்குலைவை அம்பலப்படுத்துவது எதிர்க்கட்சியின் அடிப்படை கடமை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த தோல்விகளை முன்னிலைப்படுத்துவது திமுக அரசுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினால், அதற்கான தீர்வு 'எக்ஸ்' நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுப்பது அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்கு பதில், மக்களுக்கு வேலை செய்ய திமுக அரசு முயற்சிக்கலாம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்!! தமிழகத்தில் காட்டாட்சி ராஜ்ஜியம்! அண்ணாமலை குற்றச்சாட்டு!