சபாநாயகரை சந்திக்கும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்!! தலைமை செயலகத்தில் பரபரப்பு!!
தமிழக சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை, முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: அதிமுகவில் இருந்து பல முன்னாள் எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்திக்க உள்ளனர்.
இவர்கள் மூவரும் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இடைத்தேர்தல் நடைபெற்றால் இவர்கள் தவெக சார்பில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து விலகியதற்கு ஒரே காரணத்தைச் சொல்கின்றனர். மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் வந்த தகவல்களே இதற்குக் காரணம் என்கின்றனர்.
இதையும் படிங்க: விசில்போடு!! புதுச்சேரியிலும் தவெக கூட்டணி! விஜய் உடன் இணைந்து ஆட்சி நடத்த ரங்கசாமி திட்டம்!!
திமுகவை எதிர்த்து உருவான அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பொய் வழக்குகள் போட்டவர்களுடன் கைகோர்ப்பது எப்படி என்றும் ஆதங்கம் தெரிவித்தனர்.
ராஜினாமா கடிதங்களை கைப்பட எழுதி சபாநாயகரிடம் அளித்தனர். இசக்கி சுப்பையா மட்டும் பிரிண்ட் செய்த கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்து கைப்பட எழுதச் சொன்னார். இந்த சம்பவங்கள் அதிமுகவில் தொடர் வெளியேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்நிலையில் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ‘குதிரை பேர அரசு’, ‘பொய்க்கால் குதிரை அரசு’ என தவெக அரசை விமர்சித்து வருகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து புகார் அளித்தன. ஆளுநர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் தவெக எம்எல்ஏ இளையராஜாவுக்கு எதிராக திமுகவினர் ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக அவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் களம் இப்போது பதற்றமான சூழலில் உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியில் டிஜிட்டல் புரட்சி! ஸ்லைடு, வீடியோ தயாரிப்பாளர்களுக்கு திடீர் டிமாண்ட்!