×
 

உங்கள் ரேஷன் கார்டு தகவல்கள் திருடப்படலாம்? தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்த வார்னிங்!

இணையதளத்தின் பாதுகாப்பு பலவீனங்களை கண்டறிந்து சரிசெய்வது, சைபர் தாக்குதல்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சென்னை: தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன்படுத்தி வரும் ரேஷன் கார்டு தொடர்பான இணையதளத்தில் சைபர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையவழியாக திருடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், தமிழக உணவு வழங்கல் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் முதல் பல்வேறு திருத்தப் பணிகள் வரை பெரும்பாலான சேவைகள் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிப்பது, ஏற்கனவே உள்ள கார்டில் முகவரி மாற்றம் செய்வது, குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது, மொபைல் எண்ணை மாற்றுவது, நகல் ரேஷன் கார்டு பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் பொதுவிநியோகத் திட்ட இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுவிநியோகத் திட்டம் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், இணையதளத்தில் பொதுமக்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், சைபர் தாக்குதல்கள் அல்லது தகவல் திருட்டு போன்ற அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கணினி அவசரகால பதிலளிப்பு குழு, தமிழக உணவு வழங்கல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு... இன்று மட்டும் சிறப்பு e-KYC முகாம்; விரல் ரேகை பதிவு கட்டாயம் என முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து தமிழக பொதுவிநியோகத் திட்ட இணையதளத்தில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இணையதளத்தின் பாதுகாப்பு பலவீனங்களை கண்டறிந்து சரிசெய்வது, சைபர் தாக்குதல்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழகத்தில் தற்போது முன்னுரிமை, அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமையற்ற அரிசி, சர்க்கரை மற்றும் எந்தப் பொருளும் வாங்காத குடும்ப அட்டைகள் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் சுமார் 2.28 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் சுமார் 7.01 கோடி குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் ரேஷன் கார்டு இணையதள பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் எச்சரிக்கை பொதுமக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே நேரத்தில், பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு விவரங்கள், மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தேவையற்ற இணையதளங்கள் அல்லது நபர்களிடம் பகிராமல் எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியமாகிறது.

இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளம்! 8,000-ல் இருந்து 12,500 கனஅடியாக எகிறிய நீர்வரத்து! பரிசல் தடை நீட்டிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share