ரேஷன் கடைகளில் விற்றுத்தீர்ந்தது வெங்காயம்! 1,000 டன் கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!
இந்த வெங்காயம் சென்னையை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள 8,914 ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, கடந்த செப்டம்பர் 3-ம் தேதி முதல் விற்பனை தொடங்கியது.
சென்னை: தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் பெரும்பாலான இடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. இதையடுத்து கூடுதலாக 1,000 டன் வெங்காயத்தை மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளிடம் இருந்து வாங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வெங்காய விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் அங்கிருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்ததால், சந்தையில் விலை உயரத் தொடங்கியுள்ளது.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் சுமார் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதையும் படிங்க: வெங்காய விலை உயர்வுக்கு செக்! ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை! சூப்பர் அறிவிப்பு!
இதற்காக மத்திய அரசிடம் இருந்து முதல் கட்டமாக 910 டன் வெங்காயத்தை தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையம் வாங்கியது. இந்த வெங்காயம் சென்னையை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள 8,914 ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, கடந்த செப்டம்பர் 3-ம் தேதி முதல் விற்பனை தொடங்கியது.
ஒரு ரேஷன் கடைக்கு சராசரியாக 50 கிலோ வெங்காயம் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வீதம், ஒரு கிலோ ரூ.35 என்ற விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. சந்தை விலையை ஒப்பிடும்போது குறைந்த விலையில் கிடைத்ததால், பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பெரும்பாலான ரேஷன் கடைகளில் இருப்பில் இருந்த வெங்காயம் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொதுமக்களுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில், மேலும் 1,000 டன் வெங்காயத்தை வழங்குமாறு மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளிடம் தமிழக கூட்டுறவுத்துறை கேட்டுள்ளது.
கூடுதல் வெங்காயம் தமிழகத்துக்கு வந்ததும், தேவைக்கேற்ப ரேஷன் கடைகளில் மீண்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தையில் வெங்காய விலை உயர்ந்துள்ள நேரத்தில், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் வெங்காயம் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னைக்கு வருகிறது 840 டன் வெங்காயம்! கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு அதிரடி! விலை உயர்வுக்கு செக்!