திமுகவை சும்மா விடப் போறது இல்லை?! கடந்த ஆட்சிகால மணல் குவாரி முறைகேடுகள்! தூசி தட்டும் தவெக அரசு!
₹4,736 கோடி மணல் குவாரி முறைகேடு வழக்கு மீண்டும் வேகமெடுக்கிறது. பழைய ஆவணங்களை திரட்டும் கனிமவளத்துறை, புதிய அரசு எடுக்கவுள்ள அடுத்த நடவடிக்கை என்ன? முழு விவரம் இங்கே.
தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட ₹4,736 கோடி மதிப்பிலான மணல் குவாரி முறைகேடு தொடர்பான விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, இந்த வழக்கின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் பழைய ஆவணங்கள் மற்றும் சட்ட ஆவல்களை மீண்டும் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மொத்தம் 23 ஆற்று மணல் குவாரிகள் செயல்பட்டன. இந்த குவாரிகளில் இருந்து மணலை யார்டுகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை சில ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மணல் எடுக்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அமலாக்கத்துறை 2023ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையின் ஒரு பகுதியாக ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தி குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அப்போது உண்மையில் எடுக்கப்பட்ட மணலின் அளவுக்கும் அரசின் வருவாய் பதிவுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!
இதன் அடிப்படையில் சுமார் ₹4,736 கோடி மதிப்பிலான சட்டவிரோத நிதி பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டது. இதுதொடர்பாக வேலூர், கரூர், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த காலகட்டத்தில் இந்த விவகாரத்தை மாநில அரசே விசாரிக்கும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து குறிப்பிடத்தக்க விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த வழக்கு நீண்ட காலமாக முன்னேற்றமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது புதிய அரசு இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கைகள், நீதிமன்ற பதிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சட்டரீதியாக எந்த அடிப்படையில் விசாரணையை முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!