ஒரே IP முகவரியில் பல நிறுவனங்கள் டெண்டர்! ரூ.1,028 கோடி முறைகேடு! மின்வாரிய வழக்கில் அதிரடி திருப்பம்!
தமிழ்நாடு மின் விநியோக கழக அதிகாரிகளின் வீடுகள், அரசு ஊழியர்கள் மற்றும் தனிநபர்களின் இடங்கள், மின்சாதனங்களை கொள்முதல் செய்து விநியோகித்ததாக கூறப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னை: தமிழக மின்வாரியத்தில் அலுமினிய கண்டெக்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக் காலமான 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், மின்வாரியத்துக்கு தேவையான அலுமினிய கண்டெக்டர்கள் உள்ளிட்ட மின்சாதனங்கள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொள்முதல் நடவடிக்கைகளில் சுமார் ரூ.1,028 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த ஜூன் 30-ம் தேதி பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. முதல்கட்ட விசாரணையில், டெண்டர் நடைமுறையில் சில முக்கிய சந்தேகத்துக்குரிய அம்சங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?
குறிப்பாக, கொள்முதலில் பங்கேற்ற சில நிறுவனங்கள் தாக்கல் செய்த ஒப்பந்தப்புள்ளிகள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட இறுதி டெண்டர் மதிப்பைவிட குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். தமிழ்நாடு மின் விநியோக கழக அதிகாரிகளின் வீடுகள், அரசு ஊழியர்கள் மற்றும் தனிநபர்களின் இடங்கள், மின்சாதனங்களை கொள்முதல் செய்து விநியோகித்ததாக கூறப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பானதாக கருதப்படும் முக்கிய ஆவணங்கள், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட விதம் தொடர்பான டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் ஷாக் அடிக்கும் EB பில்?! மின் கட்டணம் எகிறியதற்கு 'லோ வோல்டேஜ்' காரணமா? மின்வாரியம் விளக்கம்!