×
 

அனைத்து பஸ்களிலும் பெண்களுக்கு இலவசம்?! சொன்னதை செய்கிறார் முதல்வர் விஜய்! பிறந்தநாளில் அறிவிப்பு?!

அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயண வசதியை விரிவுபடுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையில் மகளிர் நலன் தொடர்பான திட்டங்கள் குறித்த உயர்மட்ட ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக, தற்போது நகரப் பேருந்துகளில் மட்டும் அமலில் உள்ள பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளது. 

முதல்வர் விஜய் தலைமையில் நேற்று போக்குவரத்துத் துறை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவான விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 21,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதால், இலவச பயணத் திட்டத்தை மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளுக்கும் நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் கலந்துரையாடினார்.

இதையும் படிங்க: தவெகவின் முதல் அமைச்சரவை கூட்டம்! முதல்வர் விஜய் அரசின் முழுமுதல் பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தத் திட்டம் அமலானால், கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களின் பயணச் செலவு பெருமளவு குறையும். குடும்பப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை, மானியத் தொகை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டன.

மேலும், மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து எரிபொருள் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணியாளர் பற்றாக்குறை, ஓய்வூதிய நிலுவை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

இதனிடையே, தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் திட்டத்தை ரூ.2,500-ஆக உயர்த்தினால் மாதம் ரூ.3,275 கோடியும், ஆண்டுக்கு ரூ.39,300 கோடியும் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிதியைத் திரட்டும் வழிகள், செலவினங்களில் சிக்கனம் உள்ளிட்டவை குறித்து விரிவான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரு முக்கிய திட்டங்களும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார வலிமை, சுயமரியாதை ஆகியவற்றை உயர்த்தும் இந்த நலத்திட்டங்கள் தமிழக அரசின் முன்னுரிமையாக உள்ளன. இந்த அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்! உதயநிதி! எடப்பாடி பழனிசாமி! சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் யார்? யார்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share