எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்! இப்பிடி ஏமாத்திட்டீங்களே!? காங்., எம்.எல்.ஏ - எம்.பி-யை வறுத்தெடுத்த திமுக தொண்டர்!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு: காங்கிரஸ் ஆதரவு பெற்ற தவெகவுக்கு துரோகம் என்று கொந்தளிக்கும் திமுக தொண்டர்கள்!
தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், தவெக ஆட்சியமைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பது திமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் எம்.பியிடம் திமுக தொண்டர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில், தொகுதிக்கு தொடர்பில்லாத கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சுதா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாக உள்ளார். அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தபோதிலும் மீண்டும் காங்கிரஸுக்கே வழங்கப்பட்டது. இதில் தஞ்சாவூரை சேர்ந்த ஜமால் முகமது யூனூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது கூட காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் கூட்டணி கட்சியினரின் தீவிர தேர்தல் பணியால் ஜமால் முகமது யூனூஸ் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டங்கள்தான் தனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: திமுக - அதிமுக கூட்டு வச்சாலும் விஜய்தான் CM!! மறுதேர்தலே சிறந்த வழி!! ஸ்ரீதர் வேம்பு அதிரடி!
இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க கூடுதல் ஆதரவு தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது திமுக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த சூழலில் மறையூர் கிராமத்தை சேர்ந்த திமுக தொண்டர் மோதிரம் கணேசமூர்த்தி என்பவர், எம்.பி சுதா மற்றும் எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு “உங்களை ஜெயிக்க நாங்கள் உழைத்தோம், இப்படி துரோகம் செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எம்.பி சுதா “நேரில் வந்து பேசுகிறேன்” என்று கூறி அழைப்பை முடித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ், “இது நான் எடுத்த முடிவு இல்லை. இது எந்த துரோகமும் அல்ல” என்று பதிலளித்ததாக கூறப்படும் ஆடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய முயற்சி.. பாஜக வழியில் பயணிப்பதாக காங்கிரஸுக்கு டி.ஆர்.பாலு சுளீர் பதிலடி...!