×
 
☰

கரண்ட் பில் ஜாஸ்தியா வருதா? இனி மின் கட்டணத்தை நீங்களே கணக்கிடலாம்! புதிய வசதி! மக்களுக்கு குட் நியூஸ்!

இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், மின் கணக்கீட்டில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் உத்தேசக் கணக்கீடுகள் தொடர்பான புகார்களைக் குறைக்க முடியும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை: வீடுகளில் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களுக்குத் தீர்வு காணும் வகையில், நுகர்வோரே தங்கள் வீட்டு மின் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு, புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியைத் தமிழக மின் வாரியம் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின் வாரியத்தின் மொபைல் செயலியில் உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி மின் மீட்டரை நீங்களே கணக்கிடலாம்!

தமிழகத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இதற்காக மின் வாரியப் பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று மீட்டரில் பதிவாகியுள்ள யூனிட் அளவைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அறுந்த மின்கம்பிகளை தொடாதீர்கள்: பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் அவசர எச்சரிக்கை!

இந்நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் மின் கணக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில இடங்களில் பணியாளர்கள் நேரில் செல்லாமல் உத்தேசமாக மின் பயன்பாட்டைக் கணக்கிடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதனால், குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும், அரசு வழங்கும் மின் கட்டணச் சலுகைகள் கிடைக்காமல் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

63வது நாளில் என்ன செய்ய வேண்டும்?

புதிய வசதி நடைமுறைக்கு வந்தால், மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டிய 60 நாட்களுக்குப் பிறகு, சலுகைக் காலமாகக் குறிப்பிடப்படும் மூன்று நாட்களையும் சேர்த்து, 63வது நாளில் நுகர்வோர் தங்கள் மின் மீட்டரை மொபைல் செயலி மூலம் புகைப்படம் எடுக்க வேண்டும்.

மீட்டரில் பதிவாகியுள்ள யூனிட் அளவு தெளிவாகத் தெரியும் வகையில் புகைப்படம் எடுத்த பின்னர், அதைச் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் மின் பயன்பாட்டுக் கணக்கீட்டுக்கான விவரங்களை நுகர்வோரே நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.

மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும்?

நுகர்வோர் பதிவேற்றும் புகைப்படத்தில் உள்ள மின் பயன்பாட்டு அளவு, முந்தைய கணக்கீட்டுடன் மென்பொருள் வாயிலாக ஒப்பிடப்படும். அதன் அடிப்படையில் நடப்பு காலத்திற்கான மின் பயன்பாட்டு அளவு இறுதி செய்யப்பட்டு, அதற்குரிய கட்டணம் நுகர்வோருக்குத் தெரிவிக்கப்படும்.

இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், மின் கணக்கீட்டில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் உத்தேசக் கணக்கீடுகள் தொடர்பான புகார்களைக் குறைக்க முடியும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், புதிய வசதியின் அதிகாரப்பூர்வ அறிமுகத் தேதி, செயல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் பயன்பாட்டுக்கான விரிவான நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது. அதுவரை நுகர்வோர் வழக்கமான மின் கணக்கீட்டு நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share