தமிழ்நாட்டில் 11 மதுபான ரகங்களுக்கு திடீர் தடை..! TASMAC நிர்வாகம் அதிரடி உத்தரவு..!
11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மார்க் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சமீபத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தயாரிக்கும் பதினொரு வகையான மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் ஆய்வு நடத்தப்பட்டபோது, அந்த மதுபானங்களில் இயற்கை சார்ந்த மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கலவைகள் அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு அப்பாற்பட்டவை என்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் டெப்போ மேலாளர்கள் அனைவருக்கும் தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதினொரு பிராண்டுகளையும் கடைகளுக்கு மாற்றுவதும், சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்வதும், மேலும் எஃப்எல்2 மற்றும் எஃப்எல்3 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் உத்தரவு வரும்வரை இந்தத் தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராண்டுகளில் விஎஸ்ஓபி எக்ஷா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி, நம்பர் ஒன் மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு! கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி!
இவற்றில் பல சாதாரண விலை வரம்பில் உள்ளவை. டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் விற்பனையாகும் வகைகளில் இவை இடம்பெறுகின்றன.என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் டாஸ்மாக்கிற்கு இருபதுக்கும் மேற்பட்ட மதுபான வகைகளை வழங்குகிறது. அவற்றில் இந்தப் பதினொரு வகைகளும் இப்போது தடைக்கு உள்ளாகி உள்ளன.
இதையும் படிங்க: மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் எவை? தமிழகம் முழுவதும் மீண்டும் கணக்கெடுப்பு தொடக்கம்!