டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!
மீதமுள்ள பகுதிகளில் கூடுதல் வசூல் நடைபெறும் கடைகள் குறித்து தகவல் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது அரசியல் தொடர்பை பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் ஆய்வுக்கூட்டம் நடத்தி, முந்தைய மாதங்களில் ஏற்பட்ட தவறுகள், செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் கூறினார். டாஸ்மாக் சங்கங்களின் தகவல்படி, மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக பணம் பெறுவது 80 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீதமுள்ள பகுதிகளில் கூடுதல் வசூல் நடைபெறும் கடைகள் குறித்து தகவல் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். பொதுமக்களின் பணத்தையும் அரசு பணத்தைப் போலவே பாதுகாக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். கூடுதல் வசூல் உள்ளிட்ட புகார்களில் ஏற்கெனவே பலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து பறந்த சஸ்பெண்ட் ஆர்டர்... டாஸ்மாக் ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய தவெக அரசு...!
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய இடங்கள் குறைந்தபட்சம் 400 முதல் 500 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டாஸ்மாக் பார்கள் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையை மாற்றி, உரிமம் பெறும் அனைவருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், கடந்த காலங்களில் MRP-ஐ மீறி விற்பனை செய்ய ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது அதற்கு மாறாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஒரு மாவட்டத்தில் அதிகளவில் MRP மீறல் கண்டறியப்பட்டால், கடை ஊழியர்களுடன் மாவட்ட மேலாளர்களும் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரித்தார்.
தனது பெயரையோ கட்சியின் பெயரையோ பயன்படுத்தி முறைகேடான வசூலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற புகார்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுபான உற்பத்தியில் 11 ஆலைகளும், 5 முதல் 6 ப்ரூயிங் ஆலைகளும் இயங்கி வருவதாக கூறிய அமைச்சர், அனைத்து உரிமம் பெற்ற ஆலைகளிடமிருந்தும் சமமாக கொள்முதல் செய்வதே அரசின் நோக்கம் என்றார். இதனிடையே, முதலமைச்சர் குறிப்பிட்ட ‘கரூர் கேங்’ மற்றும் அமைப்புசார்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உரிய சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!