கொத்து கொத்தாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி...!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணினி மற்றும் மின்னணு சாதனங்களில் இருந்த டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நோக்கி லஞ்ச ஒழிப்புத் துறை நகர்ந்துள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகளை அதிகாரிகள் தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!
குறிப்பாக, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், மதுபான பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட தனித்தனி பிரிவுகளாக ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் அனைத்தும் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுத்து, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வு முழுமையாக நிறைவடைந்த பிறகு, அடுத்த கட்டமாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராகச் செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) செந்தில் பாலாஜி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாகவும், புதுப்பிக்கப்படாத டாஸ்மாக் மதுக்கூடங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் சட்டவிரோதமாக வருவாய் ஈட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக அரசுக்கு ரூ.32.80 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேலும் கூறப்படுவதாவது, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 45 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்கும் நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்த அடி... கரூரை சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை... திமுக ஒன்றிய செயலாளர் வீட்டிலும் ரெய்டு...!