மறந்தது 20 ஆண்டு பகை! சரத் பவாரை கழட்டிவிட்ட தாக்கரே சகோதரர்கள்! மும்பை மாநகராட்சி தேர்தலில் கைகோர்ப்பு!
மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணியின் வெற்றி பயணத்தை தடுக்கும் வகையில், பிரிந்து இருந்த தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்து மும்பை மாநகராட்சி தேர்தலை சந்திக்கவுள்ளனர்.
மும்பை: மஹாராஷ்டிராவில் ஆளும் மஹாயுதி கூட்டணியின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில், பிரிந்து கிடந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளனர்.
இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்ற மஹாயுதி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்! 32 பேர் இறந்த துயரம்! காங்., நிர்வாகிக்கு பங்கு இருப்பதாக நட்டா குற்றச்சாட்டு!
கடந்த 2 மற்றும் 20-ஆம் தேதிகளில் நடைபெற்ற 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் உள்ளிட்ட 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மஹாயுதி கூட்டணி 207 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி கூட்டணியை (காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ்) பெரிதும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளின் 2,869 வார்டுகளுக்கு 2026 ஜனவரி 15-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றி பயணத்தை தடுக்கும் நோக்கில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை விலக்கி வைத்துள்ளது. அதற்கு பதிலாக, சகோதரரும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவருமான ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலான பகைமையை மறந்து, இரு சகோதரர்களும் மும்பை மாநகராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள 227 வார்டுகளில் 157 இடங்களில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும், மீதமுள்ள 70 இடங்களில் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் போட்டியிடும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டணியில் சரத் பவாரின் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித் பவார் கட்சியின் உதவியுடன் பாஜக பெரு வெற்றி பெற்றது. இதனால், சிவசேனாவின் பாரம்பரிய ஓட்டு வங்கி பாஜக பக்கம் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதை சமாளிக்கவே உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேவின் உதவியை நாடியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரம், உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்த பாஜக, மும்பை மாநகராட்சி தேர்தலில் ஓட்டு வங்கியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மும்பை மாநகராட்சி தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தாக்கரே சகோதரர்களின் இந்தக் கூட்டணி பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடற்படை குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய உளவாளி!! இந்தியாவுக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை!