×
 
☰

"ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்லியல் சான்றுகள் மழைநீரால் பாதிக்கப்படும் நிலை தொடர்வதற்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தையும், பண்பாட்டுப் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், விலைமதிப்பற்ற தொல்லியல் சான்றுகள் மழைநீரால் பாதிக்கப்படும் அவலம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அகழாய்வுக் குழிகளில் மழைநீர் தேங்கியதால் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, தொல்லியல் சான்றுகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசும் இந்தியத் தொல்லியல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், தமிழகத்தின் முக்கியமான தொல்லியல் தளங்களில் ஒன்றாகும். இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள், தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

இவற்றைப் பாதுகாக்க அகழாய்வு நடைபெற்ற பகுதிகளில் தற்காலிகக் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றின் மேற்கூரைகள் சேதமடைந்ததால் மழைநீர் உள்ளே புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2025 அக்டோபரில் பெய்த கனமழையின்போது, சேதமடைந்த தற்காலிகக் கூரைகள் வழியாக அகழாய்வுக் குழிகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கியது. இதனால், முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்பாண்டப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாகவும், 2025 மே மாதத்தில் பாதுகாப்புக் கொட்டகையின் ஒரு பகுதி சேதமடைந்ததால், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்தச் சூழலில், ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்லியல் சான்றுகள் மழைநீரால் பாதிக்கப்படும் நிலை தொடர்வதற்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தமிழர்களின் தொன்மையான நாகரிகத்திற்குச் சான்றாக விளங்கும் ஆதிச்சநல்லூரின் தொல்லியல் பொருட்கள் மழைநீரால் சேதமடையும் நிலை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய பாஜக அரசும், இந்தியத் தொல்லியல் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆதிச்சநல்லூரில் நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, அங்குள்ள தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் பறைசாற்றும் தொல்லியல் சான்றுகளைப் பாதுகாப்பதில் இனியும் அலட்சியம் தொடரக்கூடாது என்பதே அவரது வலியுறுத்தலாக உள்ளது.

இதையும் படிங்க: அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share