×
 

அஜித்குமார் மரணத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு! சந்தேகத்தை கிளப்பும் ஜி.கே.வாசன்.. உண்மை வெளிவருமா?

காவலாளி அஜித்குமார் மரணத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது.திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் கொடுத்த திருட்டு புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரித்த க்ரைம் டீம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து துன்புறுத்தினர். இதில் தான் அவர் மரணம் அடைந்தார்.

லாக்அப் டெத்துக்கு காரணமாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அஜித்குமார் திருடவில்லை. அவன் அப்பாவி என்று பல தரப்பினரும் சொல்லி வருகின்றனர். இதற்கிடையே புகார் கொடுத்த நிகிதாவின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நிகிதாவுக்கு எதிராக கொடுத்த பேட்டி திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவலாளி அஜித்குமார் மரணத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போதுதிருபுவனம் காவலாளி மரணத்திலே ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார் ? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது .அதன் அடிப்படையிலேயே தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது. முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். அப்படி என்றால் தான் உண்மை நிலை வெளிவரும் . 

ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அ.தி.மு.க  தலைமையிலான பா.ஜ.க, த.மா.கா   மற்றும் ஒத்த கருத்துடைய  கட்சிகள்  தான் நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது. எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தலைவராக உள்ளார். மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.  

எதிர்மறை வாக்கு தமிழகத்திலே நாளுக்கு நாள் அனைத்து துறையிலும் அதிகரித்துக் கொண்டு போகிறது . நாளை முதல் கோவை மண்டலத்திலிருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க உள்ளார்.

அவரது சுற்று பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். 

கீழடி ஆய்வில் நம்முடைய பாரம்பரிய பெருமைகளுக்கு எடுத்துக்காட்டாக உதாரணங்கள் நிஜ வடிவிலே வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை மத்திய அரசு தொடர்ந்து அங்கீகாரம் செய்து கொண்டிருக்கிறது. இந்த கீழடி ஆய்வு படிப்படியாக இன்னும் பல உயரம் அது செல்ல வேண்டி இருக்கிறது. பாஜக நாட்டை முன்னேற்ற பாதையிலே அழைத்துச் செல்கின்றது.இதனை ஜீரணிக்க முடியாத தி.மு.க அரசு வாக்கு வங்கிக்காக ஜாதி ,மதத்தை பிரித்து பார்த்து பேசுகிறது. அது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.

இதையும் படிங்க: சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share