சீமான் RSS கடப்பாரை; விஜய் ஒரு முகமூடி! மீண்டும் விசிக தலைவர் ஆவேசம்!
திராவிட அரசியலைத் தகர்க்கப் போவதாகக் கூறும் சீமான், RSS-இன் கடப்பாரையாக மாறியுள்ளதாகவும், விஜய்யும் சீமானும் சனாதன சக்திகளுக்குத் துணை போவதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக அரசியலில் தற்போது நிலவும் கூட்டணி மோதல்கள் மற்றும் புதிய கட்சிகளின் வருகை குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். அவர் பேசுகையில், "தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்து ஏற்படாமல் சிதறிக் கிடக்கிறார்கள். ஒரு கூட்டணியைக் கூட உருவாக்க முடியாத நிலையில் இருந்துகொண்டு, திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது" என எள்ளி நகையாடினார்.
தொடர்ந்து சீமான் மற்றும் விஜய் குறித்துப் பேசிய திருமாவளவன், "நான் பெரியார் மற்றும் அம்பேத்கரின் பிள்ளை. சனாதன சக்திகளுக்குத் துணை போகும் வகையில் சீமானும் விஜயும் செயல்படுகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமிழ் தேசியம் பேசுவது போல் சீமானும், பெரியார் குறித்துப் பேசுவது போல் விஜய்யும் நாடகமாடுகிறார்கள். கொள்கை எதிரியான பாஜக-வை விஜய் விமர்சிப்பதில்லை. பெரியார் அரசியல் என்பது விளிம்புநிலை மக்களுக்கானது; அதைத் தகர்ப்பேன் என்று கூறும் சீமான், ஆர்.எஸ்.எஸ்-இன் கடப்பாரையாக மாறியுள்ளார். இவர்கள் இருவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களாக முகமூடி அணிந்து வந்துள்ளார்கள்" எனக் குற்றம்சாட்டினார்.
பாஜக-வுடன் திமுக வைத்திருந்த பழைய கூட்டணி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துத்தான் கலைஞர் அன்று பாஜக-வுடன் கூட்டணி வைத்தார். அந்தக் கூட்டணியில் இருந்தபோதுதான் 'ராமர் எந்தக் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார்?' எனக் கேட்டுத் தனது கருத்தியல் உறுதியை வெளிப்படுத்தினார். ஆனால், இன்று பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர், அந்தக் கட்சியின் கருத்தியல் அடிமைகளாகவே மாறிவிட்டனர். தமிழகத்தில் பாஜக இந்த அளவிற்கு ஆட்டம் போடக் காரணமே அதிமுக தான்; இது அவர்கள் செய்த மிகப்பெரிய தமிழ் இனத் துரோகம்" என ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் உடனடியாகப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: சீமான் பொதுக்கூட்டத்தில் வாக்குவாதம்! வாலிபரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்..!!
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!