×
 

மு.க.ஸ்டாலின் கூடத்தான் பேசுவேன்!! தி.மு.க., குழுவுடன் பேச மறுக்கும் திருமாவளவன்! நீடிக்கும் இழுபறி!

தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசாமல், முதல்வர் ஸ்டாலினுடன் நேரடியாக பேச, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தரப்பில் இருந்து அதிருப்தி எழுந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக், இம்முறை குறைந்தது 12 தொகுதிகளை (இரட்டை இலக்கம்) கோரி வருகிறது.

முதற்கட்ட பேச்சுவார்த்தையில், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு விசிக தரப்புக்கு "கடந்த தேர்தலைப் போலவே 6 தொகுதிகளே; தேவைப்பட்டால் ஓரிரு கூடுதல் தொகுதிகளை தலைமையிடம் கேட்டு தரலாம். இரட்டை இலக்கத்தில் ஆசை வேண்டாம்" என தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த திருமாவளவன், குழுவுடனான பேச்சிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சில நாட்களில், திருமாவளவன் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரடியாக சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஸ்டாலின் "தொகுதி பங்கீட்டு குழுவுடன் தான் பேச வேண்டும்" என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், திருமாவளவன் குழுவுடன் பேச தயக்கம் காட்டி வருகிறார். முதல்வருடன் நேரடியாக பேச்சு நடத்தி தீர்வு காண விரும்புவதாக விசிக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆகாஷ் மரணத்திற்கு போலீசே காரணம்... அந்த வார்த்தையை அழுத்தி சொல்லி பகீர் கிளப்பிய திருமா... தமிழக அரசுக்கு தலைவலி...!

விசிக தரப்பில் இருந்து "இரட்டை இலக்கத்துக்கு குறைவான தொகுதிகளை ஏற்க மாட்டோம்" என உறுதியாக கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என தி.மு.க. தெரிவித்துள்ள நிலையில், தே.மு.தி.க.வுடன் பேசிய பின்னரே விசிக உடன் பேச்சு நடத்துவதாகவும் கூறியுள்ளது. 

"விசிக இல்லாமல் தி.மு.க. தேர்தலை எதிர்கொள்ளாது. எனவே, நாங்கள் விரும்பியபடி இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவோம்" என விசிக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தரப்பில் புதிய கூட்டணி கட்சிகளை சேர்த்ததால் தொகுதி ஒதுக்கீடு சிக்கலாகியுள்ளது. விசிக் கட்சியின் வலிமை மற்றும் கட்சி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என சில வட்டாரங்கள் கூறுகின்றன. தி.மு.க. 8 தொகுதிகள் வரை பரிசீலிப்பதாக தகவல்கள் உள்ளன. இந்த இழுபறி தொடர்ந்தால் கூட்டணியில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share