அண்ணாமலை ஏன் வரிந்து கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்குறீங்க? - வழக்கறிஞர் விவகாரத்தால் டென்ஷன் ஆன திருமா...!
சென்னை உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிந்து சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் திருமாவளவன் செல்லும் கார் சென்றபோது வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது மோதியது.
இதனால் கோபமடைந்த அந்த வழக்கறிஞர் திருமாவளவனின் கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். உடனே அங்கிருந்த விசிக தொண்டர்கள் கூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றம் அருகே இருசக்கர வாகனம் மீது தனது கார் மோதியதாகவும், இருசக்கர வாகனத்தில் வந்தவரை தனது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் வெளியான தகவல் தவறு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவர் கூப்பிட்டப்ப வர முடியல! ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் உருக்கம்
இதுகுறித்து அவர் பேசியிருப்பதாவது: நம்முடைய வண்டி அவர் வண்டியின் மீது மோதவில்லை அல்லது அவர் வண்டி நம்முடைய வண்டியின் மீது மோதவில்லை. அப்படி விபத்து என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சிலர் விபத்து என்கிறார்கள், சிலர் அவருடைய வண்டியில் நம்முடைய கார் போய் மோதியது என்கிறார்கள். இதெல்லாம் அப்பட்டமான தவறான தகவல்கள். அண்ணாமலை போன்றவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு உடனே இதற்கு வக்காலத்து வாங்கி நமக்கு எதிரான கருத்துக்களை பரப்புகிறார்கள் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டம் வந்துட்டா ஆட்சி மாறிடுமா? விஜய் பிரச்சாரத்தை விளாசிய திருமா..!