திமுக அதிமுகவுக்கு அடுத்து நாங்க தான்... ஒரே போடாக போட்ட திருமாவளவன்!!
திமுக, அதிமுகக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் வளர்ச்சி, வலிமை பெற்றுள்ள ஒரே கட்சி விசிக என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் 28-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி கலந்துக்கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய அவர், மேலூர் மண்ணிலிருந்து உருவான கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைப்பாய் திரள்வோம், அங்கீகாரம் பெறுவோம், அதிகாரம் வெல்வோம் என்ற கொள்கையுடன் 35 ஆண்டாக இயங்கி கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம்மோடு அரசியல் பயணத்தை தொடங்கியவர்கள் தற்போது காணாமல் போயுள்ளனர். இடது சாரிகளாக சிந்தனையுடையவர்கள் எல்லாம் தற்போது வலது சாரிகளாக மாறி வருகின்றனர். சனாதன சக்திகளால் விழுங்கப்பட்டு வருகின்றனர். ஆனால், பிற அரசியல் கட்சிகளுக்கு கொள்கை அடிப்படையில் வழிகாட்டும் இயக்கமாக விசிக வளர்ந்து இருக்கிறது. அம்பேத்கர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என கனவு கண்டார். அந்தக் கனவை விசிக நிறைவேற்றும்.
ஆசை காட்டி மாய வலையில் வீழ்த்த பார்க்கின்றனர். சில இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் போதும் எனவும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கக்கூடிய சராசரி அரசியல் வாதியாக என்னை கருதுகின்றனர். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிகமான சீட் தரவில்லை என்றால் இந்தக் கூட்டணியை விட்டு வெளியே வந்து விடுவோம் என பதில் சொல்வார்கள் எனச் சிலர் எதிர்பார்க்கின்றனர். நாங்களும் 25 ஆண்டுகள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தான். எங்களுக்கும் அரசியல் தெரியும். எங்களுக்கு அதுவல்ல இலக்கு.
எங்களது இலக்கு அம்பேத்கர் அரசியல். அம்பேத்கர் அரசியலை பேசுவது சாதாரணமானதல்ல. அதிமுக, திமுகவும் 50 ஆண்டுகள் ஆண்டுவிட்டனர். ஒருமுறை எங்களுக்கு கொடுத்துப் பாருங்கள் என யாரும் பேசலாம். அம்பேத்கர் அரசியல் அடியோடு புரட்டிப்போடுவது, புதிய மாற்றத்தை ஏற்படுத்துவது, புதிதாக கட்டமைப்பதுவே அம்பேத்கர் அரசியல். சமூக மாற்றத்துக்கான புரட்சி அரசியல். அதோடு தொடர்புடையது பெரியார் அரசியல், மார்க்சிய அரசியல்.
இதையும் படிங்க: அஜித்குமார் கொலை அரச பயங்கரவாதம்.. திருமாவளவன் காட்டம்..!
எத்தனை பேர் சட்டமன்றத்துக்கு போவதென்பதல்ல, எத்தனை பேரை அரசியல் பேசவைத்தது என்பதுதான் அம்பேத்கர் அரசியல். மற்ற அரசியல் கட்சிகளுக்கு சமூக நீதி்யை பற்றி தெரியாது. தேர்தலில் அரசியல் அம்பேத்கரை கற்பதும் பேசுவதும் நடைமுறைப்படுத்துவதுவும் கடினம். தேர்தலில் அரசியலில் இருந்து சனாதன எதிர்ப்பு அரசியல் பேசும் துணிச்சல் விசிகவுக்கு மட்டுமே தைரியம் உண்டு. தேர்தலுக்கு மட்டும் திமுகவோடு சேர்ந்துள்ளோம் என்று நினைத்து விடாதீர்கள். அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சித்திருக்கிறோம். விசிக களம் வேறு, அரசியல் வேறு, இலக்கு வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கத்தை இன்னொரு அரசியல் கட்சியால் சிதறடிக்க முடியாது.
அனைத்து தரப்பு மக்களின் அங்கீகாரத்தை பெற முடியும். இந்த தேர்தலில் என்ன முடிவெடுத்தாலும் ஒத்துழைப்பு நல்குவீர்கள். திமுக, அதிமுகக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் வளர்ச்சி, வலிமை பெற்றுள்ள ஒரே கட்சி விசிக. முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்திய சங் பரிவார் அமைப்புகள் அம்பேத்கரை ஒருபோதும் கொச்சைப்படுத்த மாட்டார்கள். ஆனால், அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சிப்பார்கள்.
அம்பேத்கருக்கு எதிரான அரசியல் செய்யும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடாமல் வெற்றி பெறவிடாமல் தடுக்க விசிக போராடுகிறது. தமிழகத்தில் சனாதன சக்திகளுக்கு இடம் இல்லை. இந்த புரிதலில் காய் நகர்த்துகிறேன். தமிழகத்தில் திமுக, அதிமுக என துருவ அரசியலாக இல்லாமல், விசிகவின் அம்பேத்கர் அரசியல் என கருத்தியல் அரசியலாக முன்னெடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு அதை அங்கீகரிக்கக் கூடாது... இதுதான் எங்கள் நிலைப்பாடு... திட்டவட்டமாக கூறிய திருமாவளவன்!!