நசுக்கப்பட்டவன் நான்தான்! கூட்டத்தில் இருபுறமும் நெறிப்பார்கள்!! எதிரணி கலாய்களுக்கு திருமா கூல் ரிப்ளை..!
பாஜகவை எதிர்ப்பவர்களுடன் கைகோர்க்க வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணியில் விசிக உள்ளதாக திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த மாத இறுதியில் திருச்சியில் நடைபெற உள்ள மதசார்பின்மை காப்போம் எழுச்சி பேரணி குறித்து சேலம் மண்டல நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், புத்தர் மறைந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின்புதான் அவருடைய கருத்துகள் வலுபெற்றன. தனி ஆளாக நான் கோவிலுக்குள் நுழைந்தால் தீர்த்து கட்டிவிடுவார்கள்.
அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் இருக்கிறது. அடிமைத்தனத்தை தகர்த்தெறியக் கூடிய சொல் அது. எங்கே அடக்குமுறை இருந்தாலும் அந்த அடக்குமுறைக்கு எதிரான சொல். ஆனால் அத்துமீறு என்றால் என்னவென்று தெரியாமல் சிலர் நம்மை கலாய்க்கிறார்கள். அடக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு மட்டும்தான் அத்துமீறு என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியும். அமைப்பாக இருந்தால்தான் அத்துமீற முடியும் என்றார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..!
ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால் லாட்டரியில் பரிசு விழுவது போல் அல்ல. மக்களின் நன்மதிப்பை பெற்றால்தான் அங்கீகாரம் பெற முடியும் என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது உண்மையிலேயே நசுக்கப்பட்டவன் நான்தான். கூட்டத்தில் என்னைப் போட்டு இருபுறமும் நெறிப்பார்கள் என நகைச்சுவையாக விளக்கமளித்த அவர், விசிக முறைப்படுத்தப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாக மாறினால் யாருடைய தயவும் நமக்கு தேவைப்படாது என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் விசிகவிற்கு இருக்கும் எழுச்சி வேறு எந்த கட்சிக்கும் இல்லை என தெரிவித்த அவர் இந்த எழுச்சியை தக்க வைத்தாலே நமக்கு யார் துணையும் வேண்டாம்; தனியாக சாதிக்க முடியும் என்றார். மேலும் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றும் கூட கட்சி சார்பில் கூட்டம், பேரணி, கொடியேற்றம், ஆர்ப்பாட்டம் நடத்த கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே அதிகாரத்தை நோக்கி நகர நாம் இன்னும் வலிமை பெற வேண்டும் என்றார்.
மேலும், அறியாமையின் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிற்கு கொத்தடிமையாக இருகிறது என வாய்க்கு வந்ததையெல்லாம் விமர்சிப்பவர்கள் பற்றி தனக்கு கவலை இல்லை என்ற திருமாவளவன் பாஜகவை எதிர்ப்பவர்களுடன் கைகோர்க்க வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணியில் விசிக உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய தேசத்தின் கருப்பொருளே அம்பேத்கர் தான். சாதி ஒழிய வேண்டும் என கூறியவர் அம்பேத்கர் மட்டுமே. காந்தி, நேரு போன்றோர் கூட இதனை கூறவில்லை. அம்பேத்கர் கட்டமைத்த அரசியல் சாசன சட்டம் தான் தேசத்தை இன்று வரை தாங்கி நிற்கிறது. ஆனால், அம்பேத்கரை பாஜக வெளிப்படையாக எதிர்க்காது. அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தை மதச்சார்பின்மை, பன்மைத்துவத்தை காக்க நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்மை காப்போம் பேரணி திருப்புமுனையாக அமையும் என்றார்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? எத்தனை சீட்டு? நேரம் வரட்டும் சொல்கிறேன்! திருமா ட்விஸ்ட் பேச்சு..!