பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை தொடர வேண்டும் என்பதே விசிகவின் நீண்டகால கனவுகளில் ஒன்று என்றும் திருமாவளவன் கூறினார்.
சென்னை: “பதவிக்காகவோ, பரிசுக்காகவோ, அதிகார வேட்கைக்காகவோ அணி மாறவில்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் விரிவாக பேசியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமாவளவன், இலக்கிய விருதுகளை வழங்கி பேசினார்.
அப்போது, ஒரு கட்சியின் அரசியல் வலிமையை எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கையை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது என்றும், மக்கள் மத்தியில் அந்த இயக்கம் பெற்றுள்ள நம்பிக்கையே அதன் வளர்ச்சிக்கான முக்கிய அடையாளம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யாரும் தப்பிக்கக்கூடாது... சி.எம். விஜய்யை அலர்ட் செய்த திருமா... தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் எச்சரிக்கை...!
கடந்த 25 ஆண்டுகளில் தமிழக அரசியலில் விசிக ஏற்படுத்திய தாக்கம் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தேர்தல் கூட்டணி கணக்குகளிலும் தாக்கம் இருந்ததாகவும் அவர் கூறினார். அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளை சமரசமின்றி மக்களிடம் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டார்.
திமுக அணியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்த திருமாவளவன், அமைச்சர் பதவி உள்ளிட்ட அதிகாரத்துக்காக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் தொடரவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் விசிக இணைந்துள்ள அரசியல் சூழல் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். விசிக அந்த அணியில் இடம்பெறாமல் இருந்திருந்தால், தவெகவை வலதுசாரி சக்திகள் ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகியிருக்கலாம் என்றும், அந்த நிலையைத் தவிர்க்கும் பொறுப்புணர்வுடன் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை தொடர வேண்டும் என்பதே விசிகவின் நீண்டகால கனவுகளில் ஒன்று என்றும் திருமாவளவன் கூறினார். தேர்தலுக்கு முன்பே கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு குறித்து தான் கணித்ததாகவும், சட்டப்பேரவையில் இருந்து தமிழக அரசியலில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி ஆட்சி குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!