இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சியினருக்கு தி.மு.க.வை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களுக்குப் பிறகு புதிய அரசியல் சூழல் உருவாகி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சியினருக்கு தி.மு.க.வை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தி.மு.க. - வி.சி.க. இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. அதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்து, அந்த கூட்டணியில் இணைந்தது. தற்போது அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.
இந்த கூட்டணி மாற்றத்திற்குப் பிறகு, தி.மு.க. மற்றும் வி.சி.க. இடையே அரசியல் விமர்சனங்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, வி.சி.க. மீது தி.மு.க.வின் சில முக்கிய நிர்வாகிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டாம் என்று திருமாவளவன் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: “அதிமுகவுக்குள்ள அப்படி என்ன தான் நடக்குது?”... தவெகவுக்கு தாவும் மாஜிக்களால் கொதித்தெழுந்த திருமா...!
தற்போது, தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் வி.சி.க. தனது அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க.வை மற்ற எதிர்க்கட்சிகளைப் போலவே அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் என்ற கருத்தை திருமாவளவன் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வி.சி.க. நிர்வாகிகள் கூறுவதாவது, தி.மு.க. கூட்டணியில் இருந்த காலத்திலேயே சில அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அவை வெளிப்படையாக பேசப்படவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும், திருமாவளவனின் அறிவுறுத்தலின்படி அமைதி காக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளதால், தி.மு.க. தரப்பில் விமர்சனங்கள் தொடர்ந்தால் அதற்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க தயார் என்ற மனநிலையில் வி.சி.க. இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல்கள் குறித்து திருமாவளவன் அல்லது வி.சி.க. தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் இந்த தகவல்கள் அடுத்தகட்ட கூட்டணி அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: "விசிக துணை"..! 5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடரும்... திருமாவளவன் உறுதி..!