வள்ளுவரை களங்கப் படுத்தாதீர்கள்!! கொதித்தெழுந்த அருண்ராஜ்! காவி உடை அணிவித்ததற்கு வலுக்கும் கண்டனம்!
லோக்பவன் அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு. வள்ளுவரை களங்கப் படுத்தாதீர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருவள்ளுவர் தின விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிவித்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மக்கள் மாளிகையில் நேற்று திருவள்ளுவர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவின்போது வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்தில் அவருக்கு காவி உடை, திருநீறு மற்றும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் (X) பதிவிட்ட அமைச்சர் அருண்ராஜ், “திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைப்பது அவரது உலகளாவிய சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதாகும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 60 ஆண்டுகள் கழித்து கிடைத்த அமைச்சர் பதவி! கோஷ்டி பூசலால் வரவேற்கக் கூட வராத காங்., தலைவர்கள்!
மேலும் அவர், “லோக்பவன் உள்ளிட்ட எந்த அரசு அல்லது பொது இடங்களிலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தவறு. திருக்குறள் மனித குலம் முழுமைக்கும் பொதுவானது. அவர் எந்த மதம், சாதி, இனம் அல்லது நாட்டுக்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’ போன்ற பொதுவான சொற்களையே பயன்படுத்தினார்” என்று வலியுறுத்தினார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவத்தை கற்றுத்தந்த வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் அடைக்க முயல்வது கடலை குடுவைக்குள் அடைக்க முயல்வது போன்றது” என அமைச்சர் அருண்ராஜ் தனது பதிவில் சுட்டிக்காட்டினார்.
திருவள்ளுவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் பேரொளி என்று குறிப்பிட்ட அவர், “அவருக்கு காவி பூசி அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஏற்புடையதல்ல. அவரது உடையை மாற்றுவதை விட, அவரது குறள்களில் கூறப்பட்ட நல்ல வழியில் நடப்பதே உண்மையான மரியாதை” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சர்ச்சை தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவரை அனைத்து தரப்பினரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. திருக்குறள் உலக அளவில் புகழ்பெற்ற நூல் என்பதால், அதன் ஆசிரியரை எந்த ஒரு குறுகிய அடையாளத்துக்குள்ளும் கொண்டு வரக்கூடாது என்பது பலரது வாதமாக உள்ளது.
இதையும் படிங்க: முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!