"நடிகர் திலகத்திற்கே வராத கூட்டமா?" - விஜய்யின் வருகை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!
சினிமா பிரபலங்களைக் காண மக்கள் கூடுவார்கள், ஆனால் அந்தக் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது என்று தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இராமநாதனை ஆதரித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று தஞ்சை பர்மா பஜார் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடைவீதி முழுவதும் நடந்து சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் எப்போதுமே திமுக மற்றும் அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆனால், இன்றைய சூழலில் அதிமுகவின் தலைமை அடகு வைக்கப்பட்டுள்ளது. முறையான தலைமை இல்லாததால் அந்தக் கட்சி வலுவிழந்து காணப்படுகிறது.
கடந்த 5 ஆண்டு கால முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைத் திட்டங்கள் மாணவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஸ்டாலினையே மீண்டும் முதல்வராக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "விஜய்க்கு போடும் ஓட்டு பாஜக-விற்கே!" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடி!
அரசியலுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வராத கூட்டமா? அல்லது நடிகர் வடிவேலுக்கு வராத கூட்டமா? சினிமா பிரபலங்களைக் காண மக்கள் கூடுவார்கள், ரசிகர்கள் ஓரளவு வாக்களிப்பார்கள். ஆனால், அந்தப் பெருங்கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. மக்கள் எப்போதும் தங்களுக்கு நல்லது செய்த திமுகவிற்கே வாக்களிப்பார்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் திமுகவின் வெற்றியைப் பெருவாரியாக உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் இராமநாதன், முன்னாள் எம்எல்ஏ நீலமேகம் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் உடனிருந்தனர். தஞ்சாவூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு அமோக ஆதரவு கிடைத்து வருவதாக அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "விஜய்யின் வாக்குறுதிகள் பட்ஜெட்டை விட அதிகம்!" - தஞ்சையில் அண்ணாமலை விமர்சனம்!