இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் (முன்பு ட்விட்டர்) வெளியான பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் தனது பதிவில், “மேற்கு வங்காளத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் அச்சமற்ற, வன்முறையற்ற, மிரட்டலற்ற மற்றும் தூண்டுதலற்ற தேர்தலாக இருக்கும். வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்காளர்களைத் தடுத்து நிறுத்துதல், வாக்காளர்களைத் தூண்டுதல், தேர்தலைச் சீர்குலைத்தல் போன்ற எந்தச் செயலும் அனுமதிக்கப்படாது” எனத் தெளிவாக எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரெக் ஓ பிரையன் தலைமையில் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தனர். வாக்காளர் பட்டியல் திருத்தம், காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வந்த TMC, இந்தச் சந்திப்பின்போது தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது. ஆனால் சந்திப்பு மிகச் சுருக்கமாக முடிந்ததாக டெரெக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேற்குவங்க தேர்தல் விறுவிறு! பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு!!
“சந்திப்பு காலை 10:02 மணிக்கு தொடங்கியது. 7 நிமிடங்களுக்குள், அதாவது 10:09 மணிக்கு ‘இங்கிருந்து வெளியேறுங்கள்’ என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எங்களிடம் கூறினார். அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் போது எப்படி நியாயமான தேர்தலை நடத்த முடியும் என்று கேட்டோம். அப்போதே எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இது மிகவும் அவமானகரமானது” என டெரெக் ஓ பிரையன் கூறினார்.
மேலும், சந்திப்பின் சிசிடிவி காட்சிகளை ஒலிப்பதிவுடன் வெளியிட வேண்டும் என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் கட்சியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மேற்கு வங்க காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு TMC கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டி வருகிறது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மேற்கு வங்க அரசியல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது. தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த தயாராகி வரும் நிலையில், மேற்கு வங்காளத் தேர்தல் மேலும் பதற்றமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!! கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!