×
 

ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ..

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

மரிய வில்சன் உரையாற்றியதாவது: "கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவருக்கு மாடல்ல மற்றையவை" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, கல்வியே ஒருவருக்கு அழியாத சிறந்த செல்வமாகும். கல்வி கற்றலில் சிறந்து விளங்கி வெற்றி பெறும் மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் உதவித்தொகைகளையும் வழங்கி கௌரவித்து வரும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, தற்போது 43 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை நிர்வகித்து வருகிறது.

இந்தப் பள்ளிகளில் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் தரமான கற்றல் சூழலை உறுதி செய்வது, மாணவர்கள் சிறந்த கல்வி பெறுவதற்கும் அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும்.

இதையும் படிங்க: கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

தற்போது அரசு பள்ளிகளில் தொழில்முறை தூய்மை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தும் நடைமுறை இல்லாததை கருத்தில் கொண்டு, "சூப்பர் கிளீன் – சூப்பர் கேம்பஸ்" திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை பராமரிப்பு மற்றும் பள்ளி வளாகங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படும். இதன் மூலம், நமது சூப்பர் சி.எம். ஆட்சியில் "சூப்பர் சேப்டி, சூப்பர் ஸ்டூடன்ட்ஸ், சூப்பர் கேம்பஸ்" என்ற இலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

முதற்கட்டமாக 10 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்காக, 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டு குழந்தைகளின் தாய்மாமனாக விளங்கும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிநடத்தும் அரசு, தரமான கல்வியுடன் தரமான கல்விக் கூடங்களும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் நோக்கில், பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக "ஒரு பள்ளி நிறைவு திட்டம்" அறிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், 514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 855 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 3,734 பள்ளிகளில் ₹2,132 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டத்திற்காக, நடப்பு ஆண்டின் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த கல்வித் திறன் மிக்க மாணவர்களுக்கு உயர்தர கல்வி வழங்கும் நோக்கில், "பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் (Modern Residential Schools)" அமைக்கப்படும்.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக அமைக்கப்படும் இந்தப் பள்ளிகளில் கல்வி, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

இந்தப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக, இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேகமாக மாறிவரும் உலகளாவிய மற்றும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப, பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை அனுபவ அடிப்படையிலான கற்றல் முறையுடன், எதிர்காலத் தலைமுறையின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மறுசீரமைப்பது காலத்தின் தேவையாகும்.

அதற்கிணங்க, பகுத்தறிவு சிந்தனை, படைப்பாற்றல், நிதிசார் அறிவு, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கணினித் திறன், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் உலகக் குடிமக்கள் மனப்பான்மை (Global Citizenship) ஆகியவற்றை மையமாகக் கொண்ட நவீன மற்றும் முற்போக்கான பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டை கற்றல் திறன் மற்றும் கல்வி வெளிப்பாட்டில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், பள்ளிப் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பதற்காக இந்த அரசு ₹25 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.

"Say No to Drugs" என்ற முழக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதேபோன்று, "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" என்ற விழிப்புணர்வு கருத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது அரசின் முக்கிய இலக்காகும். அந்த இலக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்பது அரசின் உறுதியான நிலைப்பாடாகும்.

"இளமையில் கல்" என்ற அவ்வையாரின் அறிவுரைக்கு ஏற்ப, போதைப்பொருட்கள் மற்றும் அவற்றின் தவறான பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு, முன்எச்சரிக்கை மற்றும் கல்வி இளம் தலைமுறையினரின் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்யப்பட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்பாக, அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் அமைக்கப்படும். மேலும், போதைப்பொருள் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிப்பதற்கான 10581 என்ற உதவி எண் அனைத்து பள்ளி வளாகங்களிலும் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு ₹7 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மேலும், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் தகவல்களை பகிரும் வகையில், "போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு (Drugs Free Tamil Nadu)" என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் எளிதாக பகிரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பொது நூலகங்களும் (Public Libraries) மாநில அளவிலான டிஜிட்டல் நூலகங்களாக மாற்றப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம், டிஜிட்டல் அறிவை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த உறுப்பினர் சேர்க்கை முறை, 24 மணி நேர இணையதளம் மற்றும் கைப்பேசி வழி அணுகும் வசதி, டிஜிட்டல் உள்ளடக்கங்கள், இலவச வை-ஃபை வசதி மற்றும் மாநிலத்தின் 38 மாவட்ட மைய நூலகங்களில் Co-working Spaces உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அவை கற்றல் மற்றும் புத்தாக்க மையங்களாக மேம்படுத்தப்படும்.

இந்த நோக்கத்திற்காக பொது நூலகங்களை மறுவடிவமைப்பதற்கு அரசு ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2026–27ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் சுமார் 5.32 லட்சம் ஜென்சி (Gen Z) மாணவர்களுக்கு, ₹277 கோடி மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் சைக்கிள்கள் வழங்கப்படும்.

தன்னை உயிராக நேசிக்கும் ஜென்சி தலைமுறையை, திறன் மிக்க மற்றும் பொறுப்புணர்வு கொண்ட தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்பதில் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார். அதன் வெளிப்பாடாகவே இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில், பள்ளிக் கல்வித் துறைக்காக மொத்தம் ₹44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 

இதையும் படிங்க: உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share